2018-02-14 15:43:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 12


பிப்.14,2018. திருஅவையில் நடைபெற்ற முதல் எட்டுப் பொதுச்சங்கங்களும் (கி.பி.325-870), கீழை உரோமைப் பேரரசரின் தலைநகராக விளங்கிய கான்ஸ்தாந்திநோபிள், அதாவது தற்போதைய துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரிலும், அதையடுத்த நகரங்களிலும் நிகழ்ந்தன. இச்சங்கங்கள், உரோமைப் பேரரசர்களால் கூட்டப்பட்டன. கிறிஸ்தவ விசுவாச உண்மைகளை வரையறுப்பதே இப்பொதுச்சங்கங்களின் முக்கிய நோக்கமாயிருந்தது. இந்த எட்டுப் பொதுச்சங்கங்களில், கான்ஸ்தாந்திநோபிள் நகரில் மட்டும் நான்கு பொதுச்சங்கங்கள் நடைபெற்றுள்ளன. கி.பி.869ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி முதல், 870ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை கான்ஸ்தாந்திநோபிள் நகரில் நடந்த பொதுச்சங்கம், நான்காவது கான்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கம் ஆகும். இதில், திருத்தந்தையின் மூன்று பிரதிநிதிகள், நான்கு முதுபெரும் தந்தையர் உட்பட, 102 ஆயர்கள் கலந்துகொண்டனர். உரோமைப் பேரரசர் முதலாம் பேசில், திருத்தந்தை இரண்டாம் ஏட்ரியன் (Adrian) ஆகிய இருவராலும் கூட்டப்பட்ட இப்பொதுச்சங்கத்தில், 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்பொதுச்சங்கத்தில் கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தையாகிய ஃபோசியுஸ் (Photios) என்பவருக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தையாகிய முதலாம் ஃபோசியுஸ் அவர்கள் பற்றி இவ்வாறு சொல்லப்படுகின்றது. கான்ஸ்தாந்திநோபிள் நகரில், உயரிய குடும்பத்தில் பிறந்த இவர், பொதுநிலை விசுவாசியாக இருக்கும்போதே, இந்நகரின் முதுபெரும் தந்தையாக, 858ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். திருஅவையில் இப்பதவி மிக முக்கியமானதாகும். இவருக்குமுன் பதவியிலிருந்த இக்னேஷியஸ் என்பவரை, பேரரசர் மூன்றாம் மிக்கேல், பணி நீக்கம் செய்து, ஃபோசியுஸ் அவர்களை நியமித்தார். ஆனால் இக்னேஷியஸ் என்பவர், பதவி விலக மறுத்துவிட்டார். இதனால், பேரரசருக்கும், உரோம் திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ் அவர்களுக்கும் இடையே, அதிகாரம் சார்ந்த பிரச்சனை உருவானது. இதனால் 869ம் ஆண்டு முதல் 870ம் ஆண்டுவரை நடைபெற்ற பொதுச்சங்கம், ஃபோசியுசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, இக்னேஷியஸ் என்பவரை மீண்டும் முதுபெரும்தந்தையாக நியமித்தது. அதோடு ஃபோசியுஸ் என்பவர், இரு மனித ஆன்மாக்கள் உள்ளன. ஒன்று ஆன்மீக ஆன்மா. இது அழியாதது. மற்றொன்று உலக ஆன்மா. இது அழியக்கூடியது என்று போதித்தார். பொதுச்சங்கம் ஃபோசியுசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்க இதுவும் ஒரு காரணமாகும். எனினும், பேரரசரின் ஆணையின்பேரில், ஃபோசியுஸ் அவர்கள் மீண்டும் இப்பொதுச் சங்கத்தில் சேர்க்கப்பட்டபின், சங்கம் தொடர்ந்து நடைபெற்றது.

ஃபோசியுஸ் அவர்கள், 858ம் ஆண்டு முதல் 867ம் ஆண்டு வரையிலும், 877ம் ஆண்டு முதல் 886ம் ஆண்டு வரையிலும், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தையாகப் பணியாற்றியுள்ளார். இவர், கீழை ஆர்த்தடாக்ஸ் திருஅவையில், புனிதராகப் போற்றப்பட்டு வருகிறார். புகழ்பெற்ற திருஅவைத் தந்தையான புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் அவர்களுக்குப்பின், மிகவும் வல்லமையுள்ள, மிகவும் அறிவுத்திறனுள்ள மற்றும், மிகவும் செல்வாக்குள்ள திருஅவைத் தலைவராக இவர் விளங்கியுள்ளார். ஸ்லாவ் இன மக்கள் கிறிஸ்தவத்திற்கு மனந்திரும்புவதற்கும், ஃபோசியன் பிரிவினைக்கும் காரணமான முக்கிய மனிதராகவும் இவர் இருந்துள்ளார். ஃபோசியன் பிரிவினை என்பது, தெற்கு பால்கன் பகுதியின்மீது அதிகாரம் செலுத்துவது தொடர்பாக, உரோம் திருஅவைக்கும், கான்ஸ்தாந்திநோபிள் திருஅவைக்கும் இடையே நான்கு ஆண்டுகள் (863–867) நிலவிய பிரிவினையாகும். கி.பி.869ம் ஆண்டு முதல், 870ம் ஆண்டு வரை கான்ஸ்தாந்திநோபிள் நகரில் நடந்த பொதுச்சங்கத்தை, கத்தோலிக்கத் திருஅவை, "நான்காவது கான்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கம்" என அங்கீகரிக்கின்றது. ஆனால், 879ம் ஆண்டு முதல், 880ம் ஆண்டுவரை, கான்ஸ்தாந்திநோபிளிலில் நடந்த பொதுச் சங்கத்தை, கீழை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகள், "நான்காவது கான்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கம்" என அங்கீகரிக்கின்றன. அதோடு ஃபோசியுஸ் அவர்களை, புனிதராகவும் வணங்குகின்றன. இத்தகைய வேறுபாடுகள், கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே 1054ம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் பிரிவினைக்கு ஒரு காரணம் எனச் சொல்லப்படுகின்றது. 

நான்காவது கான்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கம், 2வது நீசேயா பொதுச்சங்கத்தின் தீர்மானங்களை உறுதி செய்தது. அதாவது, திருவுருவங்கள், படங்கள் ஆகியவற்றுக்கு மேலான மரியாதை செலுத்துவது, நற்செய்தி நூலுக்கு கொடுக்கப்படுவதற்குச் சமமான வணக்கம்,அனைத்து மனிதரையும் மீட்ட மற்றும், அனைவருக்கும் விடுதலையளித்த,   நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருவத்திற்கும் செலுத்தப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் மீண்டும் உறுதி செய்யப்பட்டன. மேலும், புனித கன்னி மரியா, வானதூதர்கள், மற்றும் புனிதர்களின் திருவுருவங்களுக்கும் வணக்கம் செலுத்துவதை, இப்பொதுச்சங்கம் ஊக்கப்படுத்தியது. நம் ஆண்டவராம் கிறிஸ்துவின் திருவுருவத்தை வணங்காதவர்கள், அவரின் 2வது வருகையின்போது அவரது மகிமையைக் காணாமல் இருப்பார்களாக என்றும், கான்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கத்தில் அறிவிக்கப்பட்டது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.