2018-02-14 15:47:00

பிரேசில் தலத்திருஅவைக்கு திருத்தந்தையின் பாராட்டு செய்தி


பிப்.14,2018. இறைவார்த்தையின் துணைகொண்டு, அமைதி, ஒப்புரவு, நீதி ஆகியவற்றின் அடிப்படையில் வளர்க்கப்படும் கலாச்சாரம், வன்முறையை வெல்லும் சிறந்த வழி என்பதை உணர்ந்துள்ள பிரேசில் தலத்திருஅவையை பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தில் பிரேசில் தலத்திருஅவை மேற்கொள்ளும் உடன்பிறந்தோர் கருத்துப் பரப்பு முயற்சி,  பிப்ரவரி 14, இப்புதனன்று துவங்கியுள்ளதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டு மக்களுக்கு தன் பாராட்டுச் செய்தியை, போர்த்துகீசிய மொழியில் அனுப்பியுள்ளார்.

வன்முறையைக் களைந்து, அமைதியை கட்டியெழுப்பும் செயல்வீரர்களாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, தன் செய்தியில் கூறியுள்ளத் திருத்தந்தை, ஒவ்வொரு நாளும், அமைதியை உருவாக்க, மிகுந்த பொறுமையும், இரக்கமும் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

அடுத்தவரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து கேட்கும் மனநிலையை வளர்த்துக்கொள்வது, குடும்பங்களில் துவங்கி, சமுதாயம், நாடு ஆகிய தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டில் அண்மையில் வெளியான ஒரு தகவலில், உலகில் நிகழும் கொலைகளில், 13 விழுக்காட்டு கொலைகள், மெக்சிகோ நாட்டில் நிகழ்வதாகக் கூறப்பட்டுள்ளதென்று வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.