2018-02-15 15:42:00

அதிகமான இராணுவச் செலவில், இந்தியா 5வது இடம்


பிப்.15,2018. உலகளவில், இராணுவச் செலவுக்கென அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில், முதல் முறையாக, இந்தியா இடம் பெற்றுள்ளது. பிரிட்டனை பின்னுக்கு தள்ளி, ஐந்தாவது இடத்தை, இந்தியா கைப்பற்றியுள்ளது.

அனைத்துலக அமைதி குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற நிறுவனம், உலகளவில் இராணுவச் செலவு நிதி ஒதுக்கீடு குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கடந்த, 2017ம் ஆண்டில், உலகளவில், ஒவ்வொரு நாடும் இராணுவச் செலவுக்கென ஒதுக்கிய தொகை அடிப்படையில், முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா ஐக்கிய நாட்டின் இராணுவச் செலவு நிதி ஒதுக்கீடு, 37.77 இலட்சம் கோடி ரூபாய். இந்தப் பட்டியலில் இதுநாள் வரை ஐந்தாவது இடத்தில் இருந்த பிரிட்டனை, இந்தியா பின்னுக்கு தள்ளி, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் இராணுவச் செலவு நிதி ஒதுக்கீடு 3.30 இலட்சம் கோடி ரூபாய் என்றும்,  பிரிட்டன், 3.19 இலட்சம் கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கியுள்ளது என்றும் SIPRI அறிக்கை கூறியுள்ளது.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. அந்நாட்டின் இராணுவச் செலவு 9.48 லட்சம் கோடி ரூபாய். இது, இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம். இந்தப் பட்டியலில், 4.83 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி, சவுதி அரேபியா மூன்றாவது இடத்திலும், 3.85 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி இரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.