2018-02-15 15:08:00

திருத்தந்தையின் மறையுரை: நிற்க, பார்க்க, திரும்பிவர...


பிப்.15,2018. நின்று நிதானியுங்கள், பாருங்கள், திரும்பி வாருங்கள் என்ற சொற்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் திருநீற்றுப் புதன் மறையுரையை வழங்கினார்.

பிப்ரவரி 14, சிறப்பிக்கப்பட்ட திருநீற்றுப் புதனையொட்டி, உரோம் நகர், புனித சபீனா பசிலிக்காவில், மாலை 5 மணிக்கு, திருப்பலியை நிறைவேற்றியத் திருத்தந்தை, அச்சமின்றி, இறைவனின் பரிவு நிறைந்த அன்புடன் ஒப்புரவாகவும், நமது கிறிஸ்தவ வாழ்வில் காணப்படும் முரண்பாடுகளைக் குணமாக்கவும் தவக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்வோம் என்று, தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

நாம் சோதனைகளுக்கு உள்ளாகும் வேளையில், நம் வேதனையையும், தடுமாற்றத்தையும் பயன்படுத்தி, வெவ்வேறு குரல்கள் நமக்குள் ஒலிக்கின்றன என்று தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, நம்மை அக்கறையற்ற, செயலற்ற நிலைக்கு உள்ளாக்கும் குரலை, தீய ஆவி என்று அடையாளம் கண்டுகொள்வது கிறிஸ்தவர்களின் கடமை என்று கூறினார்.

பிறருக்கு முன் நம்மையே விளம்பரப்படுத்துதல், அவசரமாக அடுத்தவரைப் பற்றி குறைகூறுதல், அனைத்தும் இறைவனின் கோடை என்றுணர்ந்து நன்றியறிந்திருப்பதற்குப் பதில், அனைத்தையும் அடக்கி ஆளுதல் போன்ற ஆசைகளைவிட்டு விலகி நிற்கவேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

இவ்வாறு விலகி நிற்கும் வேளையில், இறைவன், பரிவோடு ஆற்றிவரும் நன்மைகளை, கண்திறந்து காணவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகள், இளையோர், வயது முதிர்ந்தோர், நோயுற்றோர் போன்றோர் நமது பார்வையின் மையமாகவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

நின்று, நிதானித்துப் பார்ப்பது, நம்மை இறைவனிடம் மீண்டும் திரும்பிவரச்செய்யும் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, எவ்வித அச்சமுமின்றி இறைவனிடம் திரும்பிவந்து, மன்னிக்கப்பட்டவர் அனைவரோடும் இணைந்து தவக்காலத்தைக் கொண்டாட நாம் அழைப்பு பெற்றுள்ளோம் என்று கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.