2018-02-16 15:21:00

உலகின் அமைதிக்காக உழைப்பதற்கு லெபனானுக்கு சிறப்பு அழைப்பு


பிப்.16,2018. இக்காலத்தில் உடன்பிறப்பு உணர்வும், ஒருங்கிணைந்த வாழ்வும் உடனடியாகத் தேவைப்படுகின்றன என்றும், இத்தகைய வாழ்வைத் தள்ளிப்போட இயலாது என்றும், லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறை அருள்பணியாளர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறினார்.

லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறை அருள்பணியாளர்கள், உரோம் நகரில், தங்கிப் படிப்பதற்கென கல்லூரி தொடங்கப்பட்டதன் பத்தாண்டு நிறைவைமுன்னிட்டு, அந்தக் கல்லூரியின் ஏறத்தாழ 45 உறுப்பினர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, லெபனான் நாட்டில் மறைப்பணியாற்றும் அருள்பணியாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய இரு கூறுகள் பற்றிக் குறிப்பிட விரும்புவதாகத் தெரிவித்தார்.

அமைதி, இளையோர் மீது அக்கறை ஆகிய இரு கூறுகள், லெபனான் நாட்டின் மறைப்பணிக்கு இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றன என்றுரைத்த திருத்தந்தை, உலகில் அமைதியைக் கொண்டு வருவதற்கு, லெபனான் நாடு, சிறப்பான அழைப்பைப் பெற்றுள்ளது என்று கூறினார்.

மேலும், லெபனான் கத்தோலிக்கத் திருஅவை, அந்நாட்டின் இளையோரை, நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் அணுகி, இளையோர் சொல்வதை உற்றுக் கேட்பதற்கு நேரம் ஒதுக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இளையோரே, லெபனான் நாட்டின் வருங்காலம் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

லெபனான் தலத்திருஅவையின் மறைப்பணிக்கு, இளையோரே மிகவும் உதவக்கூடியவர்கள் என்றும், லெபனான் இளையோரிடம், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியதையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோர் தங்கள் வாழ்வில் ஆண்டவரை வரவேற்பதில் கிடைக்கும் மகிழ்வை அனுபவிக்கும்பொருட்டு, அவர்களின் இதயங்களை நன்மைத்தனம் நோக்கித் திறப்பதற்கு, லெபனான் அருள்பணியாளர்களின் மறைப்பணி உதவுவதாக என்றும் உரைத்து, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த நவீன உலகின் போக்குகளுக்குத் தங்களை உட்படுத்தாமல், வெற்றி, மகிமை, பணம் ஆகியவற்றைப் புறக்கணித்த இயேசுவைப் பின்பற்றி, இறைவனின் இரக்கத்தை மக்களுக்கு அறிவிக்குமாறும், மத்திய கிழக்குப் பகுதி மக்களுக்கு ஒளியாகத் திகழுமாறும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.