2018-02-16 15:31:00

“Pro Petri Sede” அறக்கட்டளைக்கு திருத்தந்தை நன்றி,பாராட்டு


பிப்.16,2018. திருப்பீடத்தின் தேவைகளுக்குப் பொருளாதார உதவிகளை வழங்குகின்ற “Pro Petri Sede” எனப்படும் அறக்கட்டளையின் ஏறத்தாழ ஐம்பது உறுப்பினர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களின் பணிகளைப் பாராட்டி ஊக்குவித்தார்.

கத்தோலிக்க விசுவாசம் மற்றும், திருஅவையின் மறைப்பணி பற்றி ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்குச் சாதகமான தவக்காலத்தில், புறக்கணிப்பு, வன்முறை, தன்னலம், தோல்வி மனப்பான்மை ஆகியவைகளை எதிர்நோக்கும் உலகில், கடவுளோடும் பிறரோடும் நமக்குள்ள உறவு பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்றும் திருத்தந்தை கூறினார்.

நம் இதயங்களில் பிறரன்பு அணைந்துவிட்டதா? என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, தர்மம் செய்வதை, நம் வாழ்வுப் பாதையாக அமைத்து, தேவையில் இருப்போருக்கு உதவி செய்வதில் நிலைத்திருக்குமாறு கூறினார்.

செபம், உண்ணா நோன்பு போன்றவற்றால் ஏற்படும் பலன்கள் பற்றியும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகில் பிறரன்புப் பண்பு வளருவதற்கு, நம் இதயங்களை, ஆண்டவர் மாற்றுமாறு இறைஞ்சுவோம் என்றும் கூறினார்.

“Pro Petri Sede” அறக்கட்டளையில், பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் ஒவ்வோர் ஆண்டும் திருப்பீடத்திற்குப் பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.