2018-02-17 15:04:00

ஜுமா பதவி விலகலுக்கு தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்கள் வரவேற்பு


பிப்.17,2018. தென்னாப்ரிக்காவில், ஊழலில் சிக்கியுள்ள அரசுத்தலைவர் ஜேக்கப் ஜுமா அவர்கள் பதவி விலகியிருப்பதை வரவேற்றுள்ள, தென்மண்டல ஆப்ரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவை, இந்நிகழ்வு எவ்வளவோ காலத்திற்குமுன் நிகழ்ந்திருக்க வேணடும் என்று கூறியுள்ளது.

தென்னாப்ரிக்காவின் மக்களவையில், நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பு, பிப்ரவரி 15, இவ்வியாழனன்று இடம்பெறவிருந்தவேளை, ஜுமா அவர்களின், ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், அவர் பிப்ரவரி 14ம் தேதி தனது பதவி விலகலை அறிவித்தார்.

ஜுமா அவர்கள், இந்தப் பதவிக்குத் தகுதியில்லை என்று பல ஆதாரங்கள் வழியாக நிரூபிக்கப்பட்டாலும், அவர் தொடர்ந்து பதவியில் இருந்தது, உலக அளவில் நாட்டின் பெருமை, பொருளாதாரம், மற்றும் நாட்டினருக்கு, குறிப்பாக, மிக ஏழை மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது என்று ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழல் விவகாரங்களில் சிக்கியுள்ள, 75 வயது நிரம்பிய ஜேக்கப் ஜுமா அவர்கள், கடந்த 2009ம் ஆண்டில் தென்னாப்ரிக்க அரசுத்தலைவராகப் பதவியேற்றார். அதற்கு முன்பாக அவர் துணை அரசுத்தலைவராக இருந்தபோது 1999ல், இராணுவத்துக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கடந்த 2014ம் ஆண்டில் அரசு பணத்தில் சொகுசு வீடு கட்டியது, அரசு ஒப்பந்தங்களை குப்தா குழுமத்துக்கு முறைகேடாக ஒதுக்கியது உள்ளிட்ட பல்வேறு ஊழல் விவகாரங்களில் ஜுமா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தென்னாப்ரிக்காவின் பல நகரங்களில் மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருவதால், வறட்சியை தேசியப் பேரிடராக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.