சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ சமூக ஆய்வு

வாரம் ஓர் அலசல்–உடையில் அல்ல, உள்ளத்தில் கோடீஸ்வரர்களாக...

சமூக நீதிக்கு அழைப்பு விடுக்கின்றனர் - EPA

19/02/2018 15:04

பிப்.19,2018. தென்றல், நன்மனதூர் கிராமத்திலுள்ள அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தென்றல், கடும் உழைப்பாளி. இவனது தந்தை, ஒரு படிக்காத விவசாயி. தாய் ஒரு மாற்றுத்திறனாளி. ஆயினும் தென்றலிடம், துளிகூட தாழ்வுமனப்பான்மை இல்லை. அவனின் சிந்தனைகளும், செயல்களும் எப்போதும் உயர்வாகவே இருக்கும். வாழ்க்கையில் எப்படியாவது உயர்ந்தே தீருவேன் என்ற எண்ணம் கொண்டவன் இவன். தென்றல் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு வயது முதிர்ந்த பிச்சைக்காரர், வழிக்கப்படாத தாடியுடனும், அழுக்கான கிழிந்த உடையுடனும் உட்கார்ந்து கையேந்திக்கொண்டிருந்தார். அவரைக் கடந்துசெல்லும் போதெல்லாம் தென்றல் ஒரு புன்னகையை உதிர்ப்பான். மனதிற்குள்ளே அவருக்காக ஐயோ பாவம் என இரக்கப்படுவான். தென்றலின் புன்னகைக்காகவே காத்திருப்பார் அந்தப் பிச்சைக்காரர். எப்போதும் பேசாமல் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அவர், அன்று தென்றலிடம் பேச்சுக் கொடுத்தார். தம்பி.. உன் பேரு என்ன? என்று கேட்டார். தன்னை அழைப்பது பிச்சைக்காரர்தான் என்று புரிந்துகொண்ட தென்றல், தாத்தா.. என் பெயர் தென்றல். நான் அருகிலுள்ள பொன்மனதூர் கிராமத்தைச் சேர்ந்தவன் என்றான். தம்பி.. தப்பா நினைக்காதீங்க, நீங்க படிச்சு எதிர்காலத்தில என்னவாக ஆகப்போறீங்க என்று கேட்டார், பிச்சைக்காரர். அதற்கு தென்றல், தாத்தா... நான் நன்றாகப் படிப்பேன். அரசியலுக்கு வருவேன். பெருந்தலைவர் காமராஜரைப்போன்று ஒரு முதலமைச்சராக வருவேன். இக்கிராமத்தை, உங்களைப் போன்ற ஏழைகளே இல்லாத கிராமமாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டையே மாற்றிக் காட்டுவேன் என்றான். தென்றல் சொன்னதில் மகிழ்ந்த அந்தப் பிச்சைக்காரர், தம்பி நீங்க நிச்சயமாக முதலமைச்சரா வருவீங்க..என்றார். அதெப்படி தாத்தா நீங்க ஏதோ விளையாட்டாக கேட்டீர்கள் என்று நானும் சொன்னேன் என்றான் தென்றல். நான் உங்க நடவடிக்கைகளைப் பார்த்துத்தான் சொல்றேன். நானோ ஒரு வயதான பிச்சைக்காரன். நாற்றமெடுக்கும் உடலோடு பல மாதங்களாக இதே இடத்தில் வாழ்ந்து வருகிறேன். இந்த சின்னஞ்சிறிய சந்தில் தினமும் எத்தனையோ மனிதர்களைப் பார்க்கிறேன். ஆனால் ஒருவர்கூட என் நிலையைப் பார்த்து வருந்தியதில்லை. ஒரு சிறு புன்னகையைக்கூட உதிர்த்தது கிடையாது. மாறாக என்னை வெறுப்போடும், அருவருப்போடும் மட்டுமே பார்த்தார்கள். ஆனால் நீ ஒருவன்தான் என்னை சக மனிதனாய் பார்த்துச் சிரிப்பாய், என்னையும் ஒரு மனிதனாய் நினைத்து இப்போது என்னிடம் பேசுகிறாய். தம்பி... பிறர்மீது தூய்மையான அன்பு செலுத்துபவர்களின், ஏழைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் உள்மனம் எதை விரும்புகின்றதோ, அதை நிச்சயம் அடைந்தே தீரும். அதுமட்டுமல்ல வாழ்க்கையில் சாதிப்பதற்கு, சகிப்புத்தன்மையும், எல்லாரையும் சமமாய் நடத்துகின்ற தொலைநோக்குப்பார்வையும் அவசியம். இவையெல்லாம் உன்னிடத்தில் இருக்கின்றன என்று சொல்லி முடித்தார் அந்தப் பிச்சைக்கார தாத்தா. உடனே மாணவன் தென்றல், தாத்தா.. நீங்கள் உண்மையிலேயே பிச்சைக்காரர் இல்லை. நான் எதிர்காலத்தில் சாதிப்பதற்கும், தெளிவான பாதையில் செல்வதற்கும் பல்வேறு ஆலோசனைகளைச் சொன்ன ஞானி. நீங்கள் ஆடையில்தான் பிச்சைக்காரர். உள்ளத்தால் நீங்கள் கோடீஸ்வரர் என்று சொல்லி முடித்தான்.    

பிப்ரவரி 20, இச்செவ்வாய், உலக சமூக நீதி நாள். நாடுகளிலும், நாடுகளுக்கு இடையேயும் அமைதியும், நல்லிணக்கமும் நிறைந்த வாழ்வை ஊக்குவிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் நிறுவனம், இந்த உலக நாளை உருவாக்கியுள்ளது. இந்த நாளைச் சிறப்பாகக் கடைப்பிடிக்கும் உலக தொழில் நிறுவனம், பாலினம், வயது, இனம், மதம், கலாச்சாரம், மாற்றுத்திறன் போன்ற மக்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் களையப்பட்டால், சமூக நீதியில் முன்னேற்றம் காணப்படும் என்று கூறுகின்றது. “புலம்பெயர்ந்த தொழிலாளர் : சமூக நீதிக்குத் தாகம்” என்பது, இந்த ஆண்டின் தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று உலக அளவில் புலம்பெயர்ந்திருக்கும் 25 கோடியே 80 இலட்சம் பேரில், 15 கோடிப் பேர் தொழிலாளர்கள். ஆண்கள் 56 விழுக்காட்டினர் மற்றும் பெண்கள் 44 விழுக்காட்டினர். தரமான வேலைவாய்ப்பைத் தேடியே மக்கள் பெரும்பாலும் தங்கள் நாடுகளைவிட்டு புலம்பெயர்கின்றனர். அந்தந்த நாடுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலைத்திறன், ஏனைய தொழிலாளர்களைவிட அதிகம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய சமூக நீதி கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறியே.

சமூக நீதி என்று சொன்னவுடன், இந்நாள்களில் இந்தியாவில் வெளியாகியுள்ள வங்கி மோசடிகள் பற்றிய செய்திகள் நம்மைத் தலைகுனிய வைக்கின்றன. நாட்டில், ஒவ்வொரு நான்கு மணிநேரத்துக்கும் ஒரு வங்கி ஊழியர் மோசடியில் ஈடுபடுகிறார் அல்லது பிடிபட்டு தண்டிக்கப்படுகிறாராம். கடந்த 2015, சனவரி ஒன்றாந்தேதி முதல், 2017, மார்ச் 31ம் தேதி வரை, அரசு வங்கிகளில் பணியாற்றும் 5 ஆயிரத்து 200 அதிகாரிகளுக்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியுள்ள நிலையில், 5 வங்கிகளிடம் இருந்து, 800 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதைச் செலுத்தாமல், வெளிநாடு தப்ப முயன்ற மற்றொரு தொழிலதிபரான ரோடேமேக் பேனா நிறுவனத் தலைவர் விக்ரம் கோத்தாரியை, சிபிஐ கைது செய்துள்ளது. கான்பூரை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வந்த விக்ரம் கோத்தாரி, மோசடி ஆவணங்கள் மூலம் வாங்கிய கடனுக்கு, ஓர் ஆண்டாக, வட்டிகூட செலுத்தவில்லையாம். இதுபோன்ற மோசடிகள் இந்தியாவுக்குப் புதிது இல்லைதான். மேலும், தென்னாப்ரிக்காவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசுத்தலைவராகப் பணியாற்றிய ஜேக்கப் ஜுமா அவர்கள், ஊழல் விவகாரங்களால், கட்டாயத்தின்பேரில், கடந்த வாரத்தில் (பிப்ரவரி 14) பதவியிலிருந்து விலகியுள்ளார். வாழ்க்கையில் எல்லாவிதமான சொகுசுகளை அனுபவிக்கும் இவர்கள் போன்றோருக்கு சமூக நீதிக்கு அர்த்தமே தெரியாது. இத்தகைய மனிதர்கள், வெளியில்தான் கோடீஸ்வரர்கள். ஆனால் உள்ளத்தால் பிச்சைக்காரர்கள்.

அதேநேரம், ஒருசில நல்ல கோடீஸ்வர மனிதர்களும் உள்ளனர். குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கஜ்ராஜ் சிங் ஜடேஜா (Gajraj Singh Jadeja). திருமணமாகாத கோடீஸ்வரரான இவர், 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். தனக்குப் பின்னால் நேர் வாரிசு என்று யாருமே இல்லாத ஜடேஜா அவர்கள், அவருக்குச் சொந்தமான ஏறத்தாழ அறநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், வீடு, பங்கு பத்திரங்கள், தங்க, வைர நகைகள், வங்கியில் உள்ள சேமிப்பு பணம் ஆகிய அனைத்தையும், தன்னிடம் நாற்பது ஆண்டுகளாக வேலை செய்து வந்த வினுபாய் அவர்களுக்கு (Vinubhai Kanjibhai Jaipal) உயிலாக எழுதி வைத்துள்ளார். இதையறிந்து இவரது உறவினர்கள் இவரைக் கடத்தி, சொத்தைத் தங்களுக்கு எழுதித் தருமாறு மிரட்டியுள்ளனர். கடத்தல்காரர்களிடம் இருந்து விடுபட்ட வினுபாய் அவர்கள், மறைந்த ஜடேஜா பற்றிக் கூறுகையில் ‘அவரிடம் நான் வேலைக்குச் சேர்ந்த பிறகு எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். என் பிள்ளைகளை தனது பிள்ளைகளாகவே கருதி, அன்பு செலுத்தி, உயர் கல்விக்காக இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க வைத்தார். அந்த நன்றிக் கடனை எப்படி அடைப்பது? என்பது தெரியாமல் குழம்பிப்போய் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன், அசைவற்று மயங்கிக் கிடந்தான். அவனைக் கண்ட சாது, தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார். மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார். குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்தக் குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்துவிட்டது.  திகைத்துப் போனார் சாது. அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும், இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு. குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில நாள்கள் சென்று சந்தைக்கு குதிரை வாங்கப் போனார். அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான். சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார். திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான். சாது மெல்லச் சிரித்தார். சொல்லாதே! என்றார். திருடன் மிரண்டு, எது? என்ன?" என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான். சாது சொன்னார் - குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால்,  நீ இதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக்கிடந்தால்கூட அவர்களுக்கு உதவ முன்வரமாட்டார்கள். இந்தக் குதிரையை இழந்ததால் எனக்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றி நான் கவலைப்படவில்லை. காரணம், சில நாள்கள் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கிவிட முடியும்.  தீயவன் நீ ஒருவன் தவறு செய்ய, நல்லவர்கள் பலருக்கு காலா காலத்துக்கும் உதவி கிடைக்காமல் உயிரும் போககூடும். புரிகிறதா?"... என்றார் சாது. குறுகிய இலாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்துவிடாமல் இருப்போம். மோசடிகளை அல்ல, மனிதப் பண்புகளை வளர்ப்போம். உடையில் அல்ல, உள்ளத்தில் கோடீஸ்வரர்களாக வாழ்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

19/02/2018 15:04