சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை – “கடமை, என் உயிரைவிட முக்கியம்”

பாகிஸ்தானில் கம்பளம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சிறார் - REUTERS

20/02/2018 14:51

பாகிஸ்தானில் இலாகூருக்கு அருகே பிறந்தவர், இக்பால் மாசி. இவரது தாய், கம்பள வியாபாரம் செய்துவந்த ஒருவரிடமிருந்து, தன் அறுவைச் சிகிச்சைக்காக, 600 ரூபாய் கடன் வாங்கினார். கடனை அடைப்பதற்காக, 4 வயது சிறுவன் இக்பால், கம்பளம் நெய்யும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். அந்தத் தொழிற்சாலையில் இக்பாலைப் போல் இன்னும் பல பச்சிளம் சிறுவர்கள், ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. அச்சிறுவர்கள் அனைவரும், தொழிற்சாலையில், வேலைசெய்த இடத்திலேயே சங்கிலியால் கட்டப்பட்டிருந்தனர். ஆறு ஆண்டுகள், இக்பால், இவ்வாறு வேலை செய்தபின்னரும், கடன் இன்னும் தீரவில்லை என்று சொல்லப்பட்டது.

இக்பாலுக்கு 10 வயதானபோது, கொத்தடிமைத்தனம் சட்டத்துக்குப் புறம்பானது என்ற தீர்ப்பை, பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் வெளியிட்டது. இதையறிந்த இக்பால், கம்பளத் தொழிற்சாலையிலிருந்து தப்பித்து, அருகிலிருந்த காவல் நிலையத்தில் தன்னையே ஒப்படைத்தார். காவல் துறையினரோ, இக்பாலை, மீண்டும் அந்த தொழிற்சாலை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இக்பால் கூடுதல் சித்ரவதைகளை அனுபவித்தார்.

இரண்டாவது முறை தப்பித்த இக்பால், கொத்தடிமை விடுதலைக்கென உழைத்துவந்த ஓர் அமைப்பின் உதவியால், பள்ளியில் சேர்ந்தார். 4 ஆண்டுகள் படிக்கவேண்டிய கல்வியை, இரண்டே ஆண்டுகளில் முடித்தார். 3000த்திற்கும் அதிகமான சிறுவர், சிறுமியர், கொத்தடிமைக் கொடுமையிலிருந்து விடுதலை அடைய, இக்பால் உதவி செய்தார்.

சிறுவர், சிறுமியரின் விடுதலை குறித்து பேசுவதற்கு, உலகின் பல நாடுகளிலிருந்து இக்பாலுக்கு அழைப்புக்கள் வந்தன. அவர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உரையாற்றச் சென்றபோது, மீண்டும் பாகிஸ்தான் செல்ல விரும்புவதாகக் கூறினார். அவரது உயிருக்கு ஆபத்தான அந்நாட்டிற்கு திரும்பிச் செல்ல ஏன் விழைகிறார் என்ற கேள்வி எழுந்தபோது, "நான் செய்து முடிக்க வேண்டிய கடமை, என் உயிரைவிட முக்கியமானது" என்று பதிலளித்தார்.

1995ம் ஆண்டு, தன் 12வது வயதில், இக்பால் அவர்கள் மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய சில நாட்களில், ஏப்ரல் 16ம் தேதி, கம்பளத் தொழிற்சாலை முதலாளிகளின் ஏற்பாட்டின்படி, சுட்டுக்கொல்லப்பட்டார். இக்பால் அவர்களின் நினைவாக, "Free the Child" என்ற சமூக நீதி அமைப்பு நிறுவப்பட்டு, சிறுவர், சிறுமியருக்காக உழைத்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

20/02/2018 14:51