சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ விவிலியம்

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 5

கானா திருமணத்தில் இயேசுவும் மரியாவும் - RV

20/02/2018 15:03

நான்கு நற்செய்திகளில், நான்கு தருணங்களில் மட்டுமே, அன்னை மரியா பேசியதாகக் கூறப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியில் மூன்று முறையும், யோவான் நற்செய்தியில் ஒரு முறையும், அன்னை மரியா பேசும் கூற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. லூக்கா நற்செய்தியில் பதிவாகியுள்ள முதல் நிகழ்வு, நாசரேத்தில், இளம்பெண் மரியாவுக்கும் வானதூதர் கபிரியேலுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல். இந்த உரையாடலின் சிகரமாக, இளம்பெண் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்று கூறிய சொற்கள், காலத்தால் அழியாத அமரத்துவம் பெற்ற சொற்களாக விளங்குகின்றன.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இளம்பெண் மரியா, தன் உறவினராகிய எலிசபெத்தைச் சந்திக்கச் சென்ற வேளையில், அங்கு, அவர் கூறிய அற்புதச் சொற்கள், மரியாவின் புகழ்ப்பாடலாக (லூக்கா 1:46-55), மனதை உயர்த்தும் செபமாக, கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒலித்து வருகின்றன.

நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ள மூன்றாவது நிகழ்வு, எருசலேம் கோவிலில் நிகழ்ந்தது. 12 வயது நிறைந்த சிறுவன் இயேசுவை, அன்னை மரியா கோவிலில் கண்டதும், அவ்விருவருக்கும் இடையே ஓர் உரையாடல் நிகழ்ந்தது. இந்த மூன்று நிகழ்வுகளும் லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளன.

அன்னை மரியா பேசியதாகக் கூறப்பட்டுள்ள நான்காவது நிகழ்வு, யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ள கானா திருமணத்தில் நிகழ்ந்தது. இந்நிகழ்வில், அவர் இரண்டே வாக்கியங்களைப் பேசியுள்ளார். இவ்விரண்டில், "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" (யோவான் 2:3) என்ற கூற்றை நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம். அன்னை மரியா கூறிய இரண்டாவது கூற்று: "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5). அன்னை கூறிய இந்தக் கூற்றின் அழகையும், ஆழத்தையும் இன்றையத் தேடலில் சிந்திக்க முயல்வோம்.

'இயேசு சொல்வதைக் கேளுங்கள்' என்று அன்னை மரியா கூறவில்லை. மாறாக, ‘அவர் சொல்வதைச் செய்யுங்கள்’ என்பதே அவர் விடுத்துள்ள அழைப்பு. "உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" அதாவது, இறைவனின் தூதர் கூறிய சொற்கள், தனக்குள் செயல்வடிவம் பெறட்டும் என்று தான் முழுமனதுடன் அளித்த ஒப்புதலால், தன் வாழ்வி்ல் நிகழ்ந்த அற்புதங்களை நன்கு உணர்ந்திருந்த அன்னை மரியா, அதையொத்ததோர் எண்ணத்தை, "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்ற கூற்றின் வழியே, நம் அனைவருக்கும் வழங்கியுள்ளார்.

இந்தக் கூற்றில் உள்ள மற்றொரு முக்கியமான சொல், 'சொல்வதெல்லாம்' என்ற சொல். இறைவன் நம்மிடம் சொல்வனவற்றையெல்லாம் செய்வதே சரியான வழி. இதற்கு மாறாக, இறைவன் சொல்வதில் நமக்கு விருப்பமானவற்றை மட்டும் தெரிவுசெய்து செயலாற்றுவது, அன்னை மரியா நமக்கு விடுத்துள்ள அழைப்பு அல்ல. சவால்கள் நிறைந்த இந்த அழைப்பு, விவிலியத்தில் வேறு சில நிகழ்வுகளையும், கூற்றுக்களையும் நம் நினைவுக்குக் கொணர்கின்றது:

முதல் நிகழ்வு - தொடக்க நூலில் கூறப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டபின், பார்வோனின் நம்பிக்கையைப் பெற்று, படிப்படியாக பதவியில் உயர்ந்தார். அவ்வேளையில், எகிப்து நாட்டில் பஞ்சம் தொடங்கியது. அதன்பின், அங்கு நிகழ்ந்ததை, நாம் தொடக்க நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்:

தொடக்க நூல் 41:55

எகிப்து நாடு முழுவதும் பஞ்சம் வந்தபோது, மக்கள் பார்வோனிடம் வந்து உணவுக்காக ஓலமிட்டனர். பார்வோன் எகிப்தியர் அனைவரையும் நோக்கி, "யோசேப்பிடம் செல்லுங்கள்; அவர் சொல்வதைச் செய்யுங்கள்" என்று கூறினான்.

 

இரண்டாவது நிகழ்வு - விடுதலைப்பயண நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எகிப்திலிருந்து விடுதலை பெற்று, வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிச் சென்ற இஸ்ரயேல் மக்கள், சீனாய் மலையடிவாரத்தை அடைந்தனர். அவ்வேளையில், மோசே, இறைவனைச் சந்திக்க மலையேறிச் சென்றார். இறைவனைச் சந்தித்தபின் மலையிறங்கி வந்த மோசே,  மக்களின் தலைவர்களை வரவழைத்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்ட இக்காரியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக, "ஆண்டவர் கூறியபடியே அனைத்தும் செய்வோம்" என்று மறுமொழி கூறினர். (வி.ப. 19:7-8)

இறைவன் சொல்வதைக் கேட்டு செயல்பட்டால் அற்புதங்கள் நிகழும் என்பதை தன் வாழ்வில் உணர்ந்திருந்ததால், 'அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்று அன்னை மரியா கூறிய சொற்களின் எதிரொலிபோல், கெனசரேத்து ஏரிக்கரையில் மற்றுமோர் அதிசயம் நிகழ்ந்தது. அந்த எரிக்கரையோரமாக நின்றுகொண்டிருந்த சீமோனின் படகில் இயேசு ஏறி நின்று, மக்களுக்குக் கற்பித்தார். பின்னர் அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை, புனித லூக்கா இவ்வாறு விவரிக்கின்றார்:

லூக்கா 5:4-5

இயேசு பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார்.

இயேசுவின் சொற்களைக் கேட்டு செயல்பட்டதால், சீமோன் வீசிய வலையில் ஏராளமான மீன்கள் பிடிபட்டன.

இறைவன் சொற்படி செயலாற்றுவதால், அற்புதங்கள் மட்டும் நிகழ்வதில்லை. அவ்விதம் செயலாற்றுவோரே இயேசுவின் உண்மையான உறவுகளாக மாறுவர் என்பதை, லூக்கா நற்செய்தி பதிவு செய்துள்ளது. இயேசு மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்த வேளையில், அவரைச் சந்திக்க, அவரது தாயும், சகோதரர்களும் வந்தனர். அவ்வேளையில், அங்கு நிகழ்ந்ததை, புனித லூக்கா இவ்விதம் கூறியுள்ளார்:

லூக்கா 8:19-21

இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை. "உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார்.

'சொல்வது', 'கேட்பது', 'செயலாற்றுவது' என்ற மூன்று அம்சங்களைச் சுற்றி, இயேசு ஒரு சில எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார். தான் சொல்வதைச் செய்யாமல், வெறும் வாய் வார்த்தைகளால் தன்னை 'ஆண்டவரே' என்றழைப்பது வீண் என்று இயேசு விடுத்துள்ள எச்சரிக்கையை, லூக்கா நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:

லூக்கா 6: 46-47

"நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, 'ஆண்டவரே, ஆண்டவரே என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்"

என்று கூறும் இயேசு, தொடர்ந்து, இறைவனின் சொல்படி செயல்படுபவர், பாறை மீது கட்டிய வீடு என்றும், அவ்வாறு செயல்படாதவர், மணல் மீது கட்டிய வீடு என்றும் இரு ஒப்புமைகளை வழங்கியுள்ளார்.

இறைவன் சொல்வதை செயல்படுத்தாமல், வெறும் வாய் வார்த்தைகளால் ‘ஆண்டவரே’ என்றழைப்பதால் பயனில்லை என்ற எச்சரிக்கையை விடுக்கும் இயேசு, மத்தேயு நற்செய்தியில் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாட்டை வலியுறுத்தி, மற்றொரு வகையான எச்சரிக்கையை விடுக்கிறார். மறைநூல் அறிஞர்களையும், பரிசேயரையும் குறித்து அவர் விடுத்த எச்சரிக்கை இவ்வாறு ஒலிக்கின்றது:

மத்தேயு 23: 3

அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்று அன்னை மரியா கூறிய இந்த நான்கு சொற்களே, விவிலியத்தில் அவர் கூறிய இறுதிச் சொற்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த நான்கு சொற்களே, அன்னை மரியா, நமக்கு விட்டுச்சென்றுள்ள விலைமதிப்பற்ற பாரம்பரியம். வாழ்வின் பல தருணங்களில் நம்மிடம், 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதை'ப் போன்ற உணர்வு எழலாம். அவ்வேளைகளில், அன்னை மரியா கூறியுள்ள இந்த நான்கு சொற்கள், நம் வாழ்வின் அடித்தளமாக மாறினால், நம் குறைகள் நீங்கி, நிறைவு தோன்றும் அற்புதத்தை நம்மால் காணமுடியும்.

கானா திருமணத்தில், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று, அன்னை மரியா, பணியாளரிடம் கூறியதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்தனவற்றை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

20/02/2018 15:03