2018-02-20 13:07:00

இளையோர் தயரிப்புக் கூட்டத்தில் பங்குபெற அழைப்பு


பிப்.19,2018. வரும் மாதம் 19 முதல் 24 வரை, இளையோர் உலக ஆயர் பேரவை மாநாட்டிற்கான தயாரிப்புக் கூட்டம் உரோம் நகரில் இடம்பெறும்போது, அனைத்து இளைஞர்களும் அதில் ஆர்வமுடன் கலந்துகொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

அக்டோபர் மாதம் இடம்பெற உள்ள உலக ஆயர் மாமன்ற தயாரிப்புக் கூட்டம் குறித்து, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் மார்ச் மாதத்தில் இடம்பெற உள்ள தயாரிப்புக் கூட்டம், இளையோரின் நேரடி பங்கேற்பை எதிர்பார்ப்பதுடன், வலைத்தளம் வழியான கருத்துப் பரிமாற்றங்களையும் வரவேற்கிறது என்றார்.

பல்வேறு வலைத்தளங்களில் செயல்படும் இளையோர் இந்த தயாரிப்புக் கூட்டத்தின்போது இணைக்கப்படுவர் எனவும், உலக ஆயர் பேரவையின் செயலக வலைத்தளத்தில் தேவையான தகவல்களை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திருத்தந்தை  தன் மூவேளை செப உரையின் இறுதியில் இளையோருக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், சிறையிலிருக்கும் கைதிகளுக்கு, இத்தவக்காலத்தில் சிறப்புச்செய்தி ஒன்றையும் வழங்கினார் திருத்தந்தை.

'சிறையிலிருக்கும் என் சகோதர சகோதரிகளே, இத்தவக்காலத்தை, ஒப்புரவு மற்றும் வாழ்வை புதுப்பிக்கும் காலமாக பயன்படுத்த அழைப்பு விடுக்கிறேன், இறைவனின் இரக்கம் நிறை பார்வையின் கீழ் வாழுங்கள், ஏனெனில் மன்னிப்பதில் இறைவன் எந்நாளும் சோர்வடைவதில்லை', என மேலும் கூறினார் திருத்தந்தை.

தன் மூவேளை செப உரையின் இறுதியில், தான் இஞ்ஞாயிறு முதல் மேற்கொள்ளும் தியானம் குறித்து எடுத்துரைத்து, தனக்காகவும் தன்னுடன் தியானம் மேற்கொள்ளும் திருப்பீட தலைமையக உயர் அதிகாரிகளுக்காகவும் செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரானசிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.