2018-02-20 14:57:00

ஏன் என்ற கேள்விக்கு இறைவனால் மட்டுமே பதில் சொல்ல முடியும்


பிப்.20,2018. நம் வாழ்வில் ஏன்? என்ற கேள்வி பலமுறை எழுகின்றது, இறைவன் ஒருவரே அக்கேள்விக்குப் பதில் தரவல்லவர், நம்மால் அவரை நோக்கி, அவர் சொல்வதைக் கேட்டு, கண்ணீர் சிந்த மட்டுமே இயலும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ருமேனியா நாட்டுச் சிறாரிடம் கூறினார்.

ருமேனியாவில் சிறாரின் கல்விக்கு உதவும் தன்னார்வல அமைப்பு ஒன்று அழைத்து வந்திருந்த, பெற்றோரை இழந்த சிறாரை, கடந்த சனவரி 4ம் தேதி வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, அச்சிறார் கேட்ட ஆறு கேள்விகளுக்கு வழங்கிய பதில்கள், இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.

இச்சிறார் கேட்ட கேள்விகளில், ஏன்? இவை ஏன்? என்பதே அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன என்றுரைத்துள்ள திருத்தந்தை, சிறார் ஏன் துன்புறுகின்றனர் என்ற கேள்விக்கு, இறைவன் ஒருவரால் மட்டுமே பதில் சொல்ல முடியும் என்று கூறினார். மேலும், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத், விண்ணகத்திற்குச் செல்லவில்லை என்று நம்மால் சொல்ல முடியுமா? என்றும் திருத்தந்தை சிறாரிடம் கேள்வி எழுப்பினார்.  

இச்சந்திப்புக்கு நன்றி கூறியத் திருத்தந்தை, ருமேனியாவிலும், உலகின் ஏனைய பகுதிகளிலும், நோய்கள், போர்கள், அடிமைமுறை போன்றவற்றால் துன்புறும் அனைத்துச் சிறாரையும் இறைவனிடமும், அன்னை மரியிடமும் அர்ப்பணிப்போம் என்றும் கூறினார்.

வாழ்வு ஏன் இவ்வளவு கடினமாக இருக்கின்றது?, நண்பர்கள் மத்தியில் ஏன் அடிக்கடி சண்டைபோட்டுக்கொள்கின்றோம்? அருள்பணியாளர்கள் ஆலயத்திற்குச் செல்லுங்கள் எனக் கூறுகின்றார்கள், ஆனால் ஆலயத்திலிருந்து வெளியே வந்தபின்னர் பாவம் செய்கின்றோம், தவறுகிறோம், எனவே ஏன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்? என்று முதலில் கேட்டனர் சிறார்.

மனிதரின், தான் என்ற முனேப்பே இதற்கு காரணம் என்று பதில் கூறியத் திருத்தந்தை, ஆலயத்திற்குச் செல்வது முக்கியம், அங்கு இறைவனை நோக்குவது மட்டுமல்ல, இறைவன் நம்மை நோக்குவதற்கும் கையளிக்க வேண்டும் என்றார். இச்சந்திப்பில் தனது தாயால் கைவிடப்பட்ட ஒரு சிறுவனை அணைத்து, நான் உனக்காக கண்ணீர் சிந்துகிறேன் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.