2018-02-20 15:38:00

குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பதைத் தடுக்கும் நடவடிக்கை அவசியம்


பிப்.20,2018. குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பதைத் தடுக்கும் நோக்கத்தில், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் உயிர்வாழ்வதற்குச் சரியான தீர்வுகளைக் காணுமாறு, உலக சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது, ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம்.

ஒவ்வொரு குழந்தையும் வாழ வேண்டும் என்ற தலைப்பில், பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகள் பற்றிய புதிய அறிக்கையை இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள யுனிசெப் நிறுவனம், உலகில் ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ பத்து இலட்சம் குழந்தைகள், பிறந்த நாளன்றே இறக்கின்றன என்று கூறியுள்ளது.

உலகில், குறிப்பாக, மிகவும் வறிய நாடுகளில், பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கின்றது என்றும், ஜப்பான், சிங்கப்பூர், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் பிறக்கும் குழந்தைகளே, வாழ்வதற்கு சிறந்த வாய்ப்பைப் பெறுகின்றன என்றும் யுனிசெப் கூறுகிறது.  

பாகிஸ்தான், மத்திய ஆப்ரிக்க குடியரசு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், பிறக்கும் குழந்தைகள் தொடர்ந்து வாழ்வதற்குரிய வாய்ப்புகள் குறைவு என்றும், மிகவும் வருவாய் குறைந்த நாடுகளில், ஆயிரத்துக்கு 27 குழந்தைகள் வீதம் இறக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் 26 இலட்சம் குழந்தைகள், பிறந்த ஒருமாத காலம்வரைகூட உயிர் வாழ்வதில்லை என்பதால், தாய்சேய் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்று, யூனிசெப் செயல்திட்ட இயக்குனர் Henrietta Fore கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.