2018-02-20 13:02:00

தவக்கால தியானத்தில் இருக்கும் திருத்தந்தையின் செப விண்ணப்பம்


பிப்.19,2018. இத்தவக்காலத்தில் தானும், திருப்பீட தலைமையக உயர் அதிகாரிகளும் மேற்கொள்ளும் தவக்கால தியானத்தின் வழி நற்பயனை அடைய செபிக்குமாறு இஞ்ஞாயிறு வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'உங்கள் அனைவருக்கும், நல்ல பலன் தரும் தவக்காலப் பயணத்தை ஆசிக்கிறேன், நானும், திருப்பீட தலைமையக உயர் அதிகாரிகளும் ஆன்மீக தியானத்தை மேற்கொள்ளும் இவ்வாரத்தில் எங்களுக்காக செபிக்குமாறு விண்ணப்பிக்கிறேன்' என்ற திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, வழக்கம்போல், இத்தாலியம், ஃப்ரெஞ்ச், ஆங்கிலம், போர்த்துக்கீசியம், செர்மன், போலந்து, இஸ்பானியம், இலத்தீன் மற்றும் அரபு என ஒன்பது மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

உரோம் நகருக்கு அருகேயுள்ள அரிச்சா எனுமிடத்தில் திருத்தந்தையும் திருப்பீட உயர் அதிகாரிகளும் இந்த ஞாயிறு மாலை முதல், வரும் வெள்ளி வரை தவக்கால தியானத்தை மேற்கொண்டு வருவதால், திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் டுவிட்டர் செய்தி இடம்பெறாது எனவும், இப்புதன் மறைக்கல்வி உரையும் இருக்காது எனவும் திருப்பீடம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இத்தியானத்தில்,  போர்த்துக்கீசிய அருள்பணியாளர், José Tolentino de Mendonça அவர்கள், ‘கிறிஸ்துவின் தாகம்’ என்ற தலைப்பில் தியானச் சிந்தனைகளை வழங்குகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.