2018-02-20 12:57:00

திருத்தந்தையின் அமைதி செப நாள் முயற்சியில் அனைவரின் ஈடுபாடு


பிப்.19,2018. இம்மாதம் 23ம் தேதியை, காங்கோ, தென் சூடான் மற்றும் உலகம் முழுவதன் அமைதிக்காக உண்ணா நோன்பு, மற்றும் செப நாளாக கடைபிடிக்க திருத்தந்தை விடுத்த அழைப்பு, அனைத்துக் கத்தோலிக்கராலும் செயல்படுத்தப்பட வேண்டும் என விண்ணப்பித்துள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் டேனியல் தி நார்தோ.

திருத்தந்தையின் விண்ணப்பத்திற்கு செவிமடுத்து, காங்கோ மற்றும் தென் சூடானின் நிலைகளை ஆழமாக எண்ணிப் பார்க்கும் நாம், 'அமைதியை கட்டியெழுப்ப நம்மால் என்ன செய்ய முடியும்' என இறைவன் முன்னிலையில் நம் மனச்சான்றிற்கு கேள்வி எழுப்புவோம் என தன் செய்தியில் கூறியுள்ளார் கர்தினால் தி நார்தோ.

2011ம் ஆண்டிலேயே சுதந்திரம் பெற்ற  தென் சூடானில், இலஞ்ச ஊழலும் மோதல்களும் அதிகரித்து வரும் வேளையில், காங்கோ குடியரசிலும் ஆட்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து வருவதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் தி நார்தோ அவர்கள், அப்பாவிக் குடும்பங்கள் இந்த இரு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுவரும் வேளையில், இன்றைய சூழல்களில் அந்நாடுகளின் தல திருஅவைகளின் முயற்சிகளில், திருத்தந்தையுடன் சேர்ந்து நம் செபங்களையும் இணைத்துக் கொள்வோம் என்றார்.

உண்ணா நோன்பிருந்து, அதில் சேமிக்கும் பணத்தை இந்நாடுகளின் அமைதி நடவடிக்கைகளுக்கு வழங்குவோம் எனவும் கேட்டுக்கொண்டார் அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் தி நார்தோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.