2018-02-20 15:40:00

பிலிப்பைன்ஸ் குடியேற்றதாரருடன் ஒருமைப்பாட்டுணர்வு


பிப்.20,2018. தனது நாட்டின் குடியேற்றதாரத் தொழிலாளருடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளது பிலிப்பைன்ஸ் தலத்திருஅவை.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட 32வது தேசிய குடியேற்றதாரர் ஞாயிறன்று, வெளிநாடுகளில் வேலை செய்கின்ற மற்றும் வாழ்கின்ற, அந்நாட்டினருக்காக, சிறப்பு செபங்கள் அர்ப்பணிக்கப்பட்டன.

வெளிநாடுகளில் வேலை செய்கின்ற தன் நாட்டினருடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், 1987ம் ஆண்டு முதல், தேசிய குடியேற்றதாரர் ஞாயிறைக் கடைப்பிடித்து வருகின்றது, பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கத் திருஅவை.

தற்போதுள்ள ஏறத்தாழ ஒரு கோடி பிலிப்பைன்ஸ் குடியேற்றதாரரில், பெரும்பாலானவர்கள், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஹாங்காங், குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் வேலை செய்கின்றனர்.

பிலிப்பைன்ஸ் குடியேற்றதாரர், கடந்த ஆண்டு சனவரி முதல், நவம்பர் வரை, ஏறத்தாழ 260 கோடி டாலர்களை, தாயகத்திற்கு அனுப்பியுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

எனினும், குவைத்திலுள்ள பத்தாயிரம் குடியேற்றதாரத் தொழிலாளர் நாடு திரும்ப வேண்டுமென, பிப்ரவரி 14ம் தேதி, பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கு பிலிப்பைன்ஸ் ஆயர்கள் ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளை, இத்தொழிலாளர்களுக்குப் போதிய சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.