2018-02-21 15:28:00

தியான உரை: கண்ணீர், ஒருவகை தாகத்தைப் பற்றி கூறுகிறது


பிப்.21,2018. கண்ணீர், குறிப்பாக, பெண்கள் சிந்தும் கண்ணீர், ஒருவகை தாகத்தைப் பற்றி கூறுகிறது என்ற கருத்துடன், அருள்பணி José Tolentino de Mendonça அவர்கள், இப்புதன் காலை வழங்கிய தியான உரையைத் துவங்கினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கும், பிப்ரவரி 18 ஞாயிறு மாலை முதல் தியான உரைகளை வழங்கிவரும் அருள்பணி, Mendonça அவர்கள், இப்புதன் காலையில் வழங்கிய முதல் தியான உரையில், லூக்கா நற்செய்தியில், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனியிடத்தைப் பற்றி குறிப்பிட்டார்.

அன்னை மரியா, எலிசபெத்து, நயீன் நகர கைம்பெண், மகதலா மரியா என்று பல பெண்களைக் குறித்து, நற்செய்தியாளர் லூக்கா பேசியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்பணி, Mendonça அவர்கள், இயேசுவின் வாழ்விலும், திருஅவையின் வாழ்விலும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடம் மறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இயேசுவுடன் எப்போதும் உடனிருந்த 12 திருத்தூதர்களைப் போலவே, அவரது பணியில் பல பெண்களும் உறுதுணையாக இருந்தனர் என்பதை, தன் தியான உரையில் சுட்டிக்காட்டிய அருள்பணி, Mendonça அவர்கள், தங்களுக்கே உரிய கனிவான வழிகளில், கிறிஸ்துவின் நற்செய்தியை, பெண்கள் நமக்கு புரிய வைக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.