2018-02-21 15:37:00

தியான உரை: கல்வாரியில் இயேசுவின் தாகம்


பிப்.21,2018. "தாகமாய் இருக்கிறது" என்று கல்வாரியில் இயேசு கூறியதை, உடல் அளவில் அவர் கொண்ட தாகமாக மட்டும் பொருள் கொள்ளாமல், உள்ளத்தளவில், ஆன்மீக அளவில் அவர் கொண்ட தாகம் என்ற பொருளில் திருஅவைத் தந்தையர் அதிகமாகப் பேசியுள்ளனர் என்று அருள்பணி José Tolentino de Mendonça அவர்கள், கூறினார்.

உரோம் நகருக்கு அருகே, அரிச்சா எனுமிடத்தில் அமைந்துள்ள, தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், பிப்ரவரி 18, இஞ்ஞாயிறு மாலை, ஆண்டு தியானத்தைத் துவக்கியுள்ள, திருத்தந்தைக்கும், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கும் தியானச் சிந்தனைகளை வழங்கிவரும் அருள்பணி Mendonça அவர்கள், இச்செவ்வாய் மாலை வழங்கிய தியான உரையில், யோவான் நற்செய்தி 19ம் பிரிவில் கூறப்பட்டுள்ள கல்வாரி நிகழ்வை மையப்படுத்தி, தன் கருத்துக்களை வழங்கினார்.

மக்களின் நம்பிக்கையை மனதில் கொண்டு "தாகமாய் இருக்கிறது" என்று இயேசு கூறியதற்கு பதிலிறுப்பாக, மக்களின் நம்பிக்கையின்மை என்ற புளித்த திராட்சை இரசம் அவருக்கு வழங்கப்பட்டது என்று புனித அகஸ்டின் கூறியதை அருள்பணி Mendonça அவர்கள், சுட்டிக்காட்டினார்.

யோவான் நற்செய்தி 4ம் பிரிவில், சமாரியப் பெண் இயேசுவைச் சந்தித்த நிகழ்விலும், 6ம் பிரிவில் தானே வாழ்வு தரும் உணவு என்று கூறும் வேளையிலும், 7ம் பிரிவில், எருசலேம் கூடார விழாவின்போதும், இயேசு தாகத்தைப் பற்றி பேசியுள்ளார் என்று தன் உரையில் குறிப்பிட்ட அருள்பணி Mendonça அவர்கள், யோவான் நற்செய்தியில், இயேசுவின் தாகம் ஒரு முக்கியமான கருத்தாக அமைந்துள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.