2018-02-22 15:33:00

பானமா உலக இளையோர் நாளையொட்டி திருத்தந்தையின் செய்தி


பிப்.22,2018. 2019ம் ஆண்டு சனவரி மாதம் பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு முன்னேற்பாடாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இரண்டாவது செய்தியை வெளியிட்டுள்ளார் என்று, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வாண்டு குருத்தோலை ஞாயிறன்று கொண்டாடப்படும் 33வது உலக இளையோர் நாளுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியைக் குறித்து, இவ்வியாழன் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பில், பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை இவ்வாறு கூறியுள்ளது.

2019ம் ஆண்டு சனவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி முடிய பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், அன்னை மரியா இளையோருடன் இணைந்து திருப்பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதை திருத்தந்தை, போலந்து நாட்டில் நடைபெற்ற இளையோர் நாள் நிகழ்வுகளின் இறுதியில் கூறினார்.

கடந்த ஆண்டு தலத்திருஅவை அளவில் சிறப்பிக்கப்பட்ட 32வது உலக இளையோர் நாளுக்கு, வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர் (லூக்கா 1:49) என்ற மையக்கருத்தும், இவ்வாண்டு, மீண்டும் தலத்திருஅவை அளவில் சிறப்பிக்கப்படும் 33வது இளையோர் நாளுக்கு மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர் (லூக்கா 1:30) என்ற மையக்கருத்தும், பானமா நாட்டில் கொண்டாடப்படவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக்கா 1:38) என்ற மையக்கருத்தும் வழங்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.