2018-02-22 11:04:00

பிப்ரவரி 23, அமைதி உலக செப நாளில் கலந்துகொள்ள அழைப்பு


பிப்.21,2018. பிப்ரவரி 23, வெள்ளியன்று, அமைதிக்காக செபமும், உண்ணாநோன்பும் மேற்கொள்ள வேண்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள உலக நாளில் கலந்துகொள்ள, அசிசி நகர் பிரான்சிஸ்கன் துறவு சபை, அமைதி வட்ட மேசை, அமைதி வலை அமைப்பு ஆகிய நிறுவனங்கள் உலக மக்களை அழைத்துள்ளன.

இன்றைய உலகில் அளவுக்கதிகமாக மோதல்கள் நிலவி வருவதன் விளைவாக, முன்னெப்போதும் இல்லாத, மிக அதிக அளவில், அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாகி வருகின்றன என்பதால், இந்த உயிர் பலிகளைத் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாக, திருத்தந்தை இந்த நாளை நமக்கு வழங்கியுள்ளார் என்று, அசிசி நகர் பிரான்சிஸ்கன் துறவு சபையினர் கூறியுள்ளனர்.

காங்கோ குடியரசு, மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளுக்காக சிறப்பான முறையில் செபிப்பதற்கு பிப்ரவரி 23ம் தேதி செப நாளாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், உலகில் தற்போது 36 நாடுகளில் பல்வேறு வடிவங்களில் மோதல்கள் நிலவி வருகின்றன என்பதால், உலகமனைத்தையும் நம் செபத்திலும், உண்ணா நோன்பிலும் நினைவுகூரவேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும், வன்முறையை மேற்கொள்ளப் போவதில்லை என்று, தனி மனிதர்கள், தங்களால் இயன்ற அளவு, உறுதி பூண்டால், உலகின் வன்முறைகளை பெருமளவு குறைக்கமுடியும் என்று திருத்தந்தை கூறியுள்ள கருத்தில் கவனம் செலுத்துமாறு, அசிசி நகர் பிரான்சிஸ்கன் துறவு சபையினர் கூறியுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.