2018-02-23 15:03:00

இந்தியாவில் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் ஆயர்கள்


பிப்.23,2018. இந்தியாவில் வெவ்வேறு சாதிகளுக்கிடையே கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், CBCI எனப்படும் இந்திய ஆயர் பேரவை புதிய இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் களையப்படவும், சாதி மனப்பான்மை நீக்கப்படவுமென, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழுவின் முயற்சியின்பேரில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரி 20,21 ஆகிய தேதிகளில், பெங்களூருவிலுள்ள இந்திய சமூக நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்த இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கில், மறைமாவட்ட மற்றும் மாநில அளவில் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழுக்களின் குறைந்தது 110 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த இணையதளம் பற்றி கருத்து தெரிவித்த, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழுவின் செயலர் அருள்பணி தேவசகாய ராஜ் அவர்கள், இந்திய ஆயர் பேரவை நிறைவேற்றிய தலித் மக்கள் பற்றிய தீர்மானங்கள் அமல்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில், இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்தியாவிலுள்ள கத்தோலிக்கரில், அறுபது விழுக்காட்டினர் அதாவது ஒரு கோடியே 20 இலட்சம் பேர் தலித்துகள் என்று ஆசியச் செய்தி கூறுகின்றது.

இந்திய ஆயர் பேரவை தொடங்கியுள்ள புதிய இணையதளம் www.dalitchristianscbci.org

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.