2018-02-23 15:06:00

கடும் நெருக்கடி நிலையில் 7,20,000 ரொகிங்கியா சிறார்


பிப்.23,2018. மியான்மார் மற்றும் பங்களாதேஷில், ஏழு இலட்சத்து இருபதாயிரம் ரொகிங்கியா சிறார், புயல்கள் மற்றும் வன்முறையால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்று, யுனிசெப் நிறுவனம், இவ்வெள்ளியன்று வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகின்றது.

மியான்மாரின் ரொகிங்கியா மாநிலத்தில், ஒரு இலட்சத்து 85 ஆயிரம் சிறாரும், பங்களாதேஷ் நாட்டின் முகாம்களில், ஏறத்தாழ 5 இலட்சத்து 34 ஆயிரம் சிறாரும் கடும் நெருக்கடிநிலையில் உள்ளனர் என்றும், இவர்களுக்கு, உடனடி உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், இலங்கையில், கட்டாயமாகக் காணாமல் போயுள்ளவர்களின் உறவுகள், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, போராட்டத்தை ஆரம்பித்து ஓராண்டு நிறைவுறும்வேளை, அப்போராட்டதாரர்களுக்கு நூற்றுக்கணக்கானோர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியிலுள்ள இந்து ஆலயத்திற்கு வெளியே 2017ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதியன்று, நீதிக்கான இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில், 1983ம் ஆண்டு முதல், 2009ம் ஆண்டுவரை நடந்த உள்நாட்டுப் போரில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, சரியாகத் தெரியாவிட்டாலும், இவர்களால் ஏறத்தாழ ஒரு இலட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று, Amnesty International எனப்படும், உலகளாவிய மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

மேலும், இந்தியாவில், செய்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் தங்கள் உயிரைப் பலிகொடுத்துள்ளனர், பல்கலைக்கழகங்களிலும் கருத்து, பேச்சு சுதந்திரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று, உலகளாவிய மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை குறை கூறியுள்ளது.

இந்தியாவில், கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் போன்றவை சட்டங்கள் மூலம் நசுக்கப்பட்டு வருகின்றன, செய்தியாளர்கள் மீதும், பத்திரிகைச் சுதந்திரம் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகின்றன. பல செய்தியாளர்கள் மற்றும், மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள் உயிரையும் பலிகொடுக்க நேரிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களிலும் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தெற்காசியா முழுவதுமே சிறுபான்மையினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகின்றது, அரசுகள் இவர்களைத் தடுப்பதில்லை, இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படுவதில்லை என்று குற்றம்சாட்டுகிறது இந்த அறிக்கை.

ஆதாரம் : UCAN/தி இந்து/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.