2018-02-23 14:17:00

திருத்தந்தையின் ஆண்டு தியானம் : ‘தாகத்தின் நற்பேறுகள்’


பிப்.23,2018. ‘கிறிஸ்துவின் தாகம்’ என்ற தலைப்பில், திருத்தந்தைக்கும், திருப்பீட அதிகாரிகளுக்கும், ஆண்டு தியான உரைகளை வழங்கிவந்த அருள்பணி José Tolentino Mendonça அவர்கள், ‘தாகத்தின் நற்பேறுகள்’ என்ற தலைப்பில், இவ்வெள்ளிக்கிழமை காலையில், கடைசி தியான உரையை வழங்கினார்.

இயேசுவின் மலைப்பொழிவு போதனையில் நற்பேறுகள் பற்றிச் சொல்லும் நற்செய்தியாளர் மத்தேயு, இயேசுவுக்கும், மோசேக்கும் இடையே, பழைய சட்டமாகிய பத்து கட்டளைகளுக்கும், புதிய சட்டமாகிய நற்பேறுகளுக்கும் இடையே, ஒரு பொருத்தத்தை உருவாக்குகிறார் என்பதை நாம் புரிந்துகொள்கின்றோம் என்று,  அருள்பணி Mendonça அவர்கள், தன் தியான உரையில் குறிப்பிட்டார்.

நற்பேறுகள், சட்டத்தைவிட மேலானவை, இவை ஓர் உண்மையான வாழ்வுக்கு அழைப்பு விடுக்கின்றன என்றும், இவ்வாறு அவை, திருஅவை மற்றும் மனித சமுதாயத்தின் வாழ்வுப் பாதையை ஒளிர்விக்கின்றன என்றும், அருள்பணி Mendonça அவர்கள் கூறினார்.

இயேசு திருவாய் மலர்ந்தருளிய நற்பேறுகள், வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, மாறாக அவை, அவரின் வாழ்வு முழுவதையுமே வெளிப்படுத்துகின்றன என்றுரையாற்றிய அருள்பணி Mendonça அவர்கள், ஒவ்வொரு நற்பேற்றையும் வாழ்வதற்கு, இயேசுவில் நாம் எடுத்துக்காட்டைக் காண்கின்றோம் என்றும் கூறினார்.

நம் வாழ்வும் நற்பேறுகளுக்கு ஒத்தவகையில் அமைய வேண்டுமென்றும், நற்பேறுகளின் நற்செய்தியை நாம் அமைத்திருக்கின்றோமா? நாம் எப்படி அவற்றை அறிவிக்கின்றோம்? அவற்றை எவ்வாறு நம் வாழ்வில் செயல்படுத்துகின்றோம்? போன்ற கேள்விகளையும், கடைசி தியான உரையில் எழுப்பினார் அருள்பணி Mendonça.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.