2018-02-27 14:14:00

இமயமாகும் இளமை - கல்விக்காக போராடி வென்ற இளம் மாணவி


2017, ஜூலை 19. விடிந்தால் திருமணம். திடீரென வந்திறங்கினர் அரசு அதிகாரிகள். திருமணத்தை நிறுத்தவேண்டும் என அவர்கள் கட்டளையிட, ஒரு சிறு போராட்டத்திற்குப் பிறகு, திருமணம் நின்றுபோனது.

திருமணம் தடைபட யார் காரணம் என விசாரித்தபோதுதான் தெரிந்தது, கல்யாணத்தை நிறுத்தச் சொன்னதே, மணமகள்தான் என்று. அவரை மணமகள் எனச் சொல்வது கூட பொருத்தமாக இருக்காது. திருமணம் நடக்கவிருந்தது, 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு. சட்டப்படி, அவர் 14 வயது சிறுமி.

மாணவியின் பெயர் நந்தினி. இவர், 5ம் வகுப்பு படிக்கும்போது தாய் இறந்துவிட்டார். அரவணைக்க வேண்டிய தந்தையும் கைவிட்டுவிட, நிராதரவாக இருந்த நந்தினியை தங்கள் மகளாக வளர்த்தனர், அவரது பெரியம்மாவும் பெரியப்பாவும். தாய் இல்லாத குறை தெரியாமல் வளர்ந்த நந்தினியை 10ம் வகுப்பு வரை படிக்கவைத்தனர்.

பட்டப்படிப்பு முடிக்கவேண்டும் என்ற கனவோடு இருந்த நந்தினியை, திருமணத்துக்கு தயாராகும்படி, வளர்ப்பு பெற்றோர் திடீரென சொன்னதும், அவர் அதிர்ந்துபோனார். தன்னுடைய நிலையை தோழிகளிடம் கூறி அழுத அவர், இறுதியில், திருமணத்திற்கு முன் தினம், மாலை 6 மணிக்கு, மாவட்ட ஆட்சியரை, செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு, தனக்கு நிகழப்போகும் கொடுமையைக் கூறினார். இதையடுத்து, சமூக நல அலுவலர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் ஆகியோர் இரவு 9.45 மணி அளவில், நந்தினியின் வீட்டுக்குச் சென்று, திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர்.

என்ன படிக்கப் போகிறீர்கள் என நந்தினியிடம் கேட்டபோது, “ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கிறேன். அப்போதுதான் என்னைப்போல பாதிக்கப்படும் மாணவிகளுக்கு உதவமுடியும். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரேதான் பாதுகாப்பு. மற்றவர்கள் நம்மைப் பாதுகாப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. என்னைப்போன்று பாதிக்கப்படும் சிறுமிகள் போராடி வெற்றிபெற வேண்டும்” என பக்குவமாகவும், தெளிவாகவும் பதிலளித்தார், நந்தினி.

தான் ஒரு மாவட்ட ஆட்சியராக மாறி, பெண்களுக்கு உதவவேண்டும் என்ற கனவுடன், இப்போது, திருவண்ணாமலை, சீனிவாசா உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்கிறார், நந்தினி.

ஆதாரம்: தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.