2018-02-27 15:50:00

சிட்டகாங்கில் நற்செய்தி விதைக்கப்பட்டதன் 500ம் ஆண்டு


பிப்.27,2018. பங்களாதேஷ் நாட்டில் நற்செய்தி விதைக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் விதமாக, சிட்டகாங்க் உயர்மறைமாவட்டம், 2018ம் ஆண்டை, சிறப்பு மறைப்பணி ஆண்டாக அறிவித்து, சிறப்பித்து வருகிறது.

கடந்த 500 ஆண்டுகளில் தாங்கள் அனுபவித்த விசுவாச வாழ்வைக் கொண்டாடவும், கிறிஸ்துவை இன்னும் அறியாதவர்களுக்கு, மகிழ்வுடன் நற்செய்தியை எடுத்துச் செல்லவும், இந்த மறைப்பணி யூபிலி ஆண்டில் சிட்டகாங்க் உயர்மறைமாவட்டத்தின் 11 பங்குத்தளங்களும், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது. அருள்பணியாளர்கள் Francisco Fernandez, Dominic D'Souza ஆகிய இருவரும், 1500களில் சிட்டகாங்க் பகுதியில் முதன்முதலில் நற்செய்தியை அறிவித்தனர்.

பங்களாதேஷில் கிறிஸ்தவம் மலர்வதற்கு, சிட்டகாங்க் உயர்மறைமாவட்டம் முக்கிய பங்காற்றியுள்ளது. இப்பகுதியில்தான் 1517ம் ஆண்டில் போர்த்துக்கீசிய கிறிஸ்தவ வர்த்தகர்களும், முதல் நற்செய்தியாளர்களும் காலடிகளைப் பதித்தனர். 17ம் நூற்றாண்டில்  இப்பகுதியில், 600க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்.

மேலும், பங்களாதேஷின் Sylhet மாவட்டத்தில், Lokhipur கத்தோலிக்க ஆலயத்திற்கு அருகில், ஊட்டச்சத்துப்பற்றாக்குறை உள்ளவர்களுக்கென நடத்தப்படும் மையத்தில் பணியாற்றும், புனித அன்னை தெரேசா சபை அருள்சகோதரி எம்.மதலேன் அவர்கள், திருடர்களால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

தன்னைத் தாக்கிய நான்கு பேரை மன்னிப்பதாகவும், அவர்களுக்கு எதிராக எந்தப் புகாரும் பதிவுசெய்யப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார், அருள்சகோதரி எம்.மதலேன். வங்கியில் 900 யூரோ பணத்தை எடுத்துக்கொண்டு திரும்புகையில், அவரைப் பின்புறத்திலிருந்து தாக்கியுள்ளனர் திருடர்கள்.

இந்த மையத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட சிறாரும், ஏழை மக்களும் உள்ளனர்.

ஆதாரம் : Fides /AsiaNews/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.