2018-02-27 15:28:00

வாழ்வை ஆதரிக்கும் நடைப்பயணத்தில் கர்தினால் தாக்லே


பிப்.27,2018. வாழ்வு, பகைவர்களின், மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் என்று கருதப்படும் மனிதர்களின் வாழ்வாக இருந்தாலும்கூட, அது மதிக்கப்பட வேண்டும் என்று, பிலிப்பீன்ஸ் கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள், அந்நாட்டு கத்தோலிக்கரிடம் கூறினார்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில், மனித வாழ்வை ஆதரித்து, நடைப்பயணங்கள் நடைபெற்றவேளை, மனிலாவில் நடைபெற்ற நடைப்பயணத்தை முன்னின்று வழிநடத்திச் சென்ற, அந்நகர் பேராயர் கர்தினால் தாக்லே அவர்கள், பாகுபாடின்றி அனைத்து மனிதரின் வாழ்வு மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மனிலா நகரின் முக்கிய பூங்காவில், ஏராளமான அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், மற்றும் பொதுநிலை விசுவாசிகளை வழிநடத்திச்சென்ற  கர்தினால் தாக்லே அவர்கள், ஏனையோரின் வாழ்வு, நம் எதிரிகளின் வாழ்வாக இருந்தாலும்கூட, அவ்வாழ்வு கடவுளிடமிருந்து பெற்ற கொடை என்பதில், நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஒருவர், தான் அன்புகூரும் ஆளின் வாழ்வுக்கு ஆதரவு வழங்குவது எளிது, ஆனால், அதே ஆள், தன் எதிரிகளின் வாழ்வுக்காக ஆதரவு அளிப்பது கடினம் என்றுரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், அன்னை மரியோடு இணைந்து வாழ்வுக்கு ஆதரவாக நடப்போம் என்று கூறினார்.

போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பிலிப்பீன்ஸ் அரசின் நடவடிக்கையில், இதுவரை ஏறத்தாழ 12 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று, மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.