2018-02-27 14:28:00

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 6


யோவான் நற்செய்தியில், அன்னை மரியாவின் கூற்றுகளாக, இரண்டே வாக்கியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்விரு வாக்கியங்களும் கானா திருமணத்தில் சொல்லப்பட்ட வாக்கியங்கள். "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" (யோவான் 2:3) என்றும், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்றும் அன்னை கூறிய இவ்விரண்டு வாக்கியங்களின் அழகையும், ஆழத்தையும் கடந்த இரு தேடல்களில் சிந்தித்தோம். இந்த வாக்கியங்களின் விளைவாக, கானா திருமணத்தில் நிகழ்ந்தனவற்றை இன்றையத் தேடலின் மையமாக்குவோம்.

மரியா பணியாளர்களிடம் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். கானா திருமணத்தைச் சித்திரிக்கும் பல ஓவியங்களில், இயேசு, அப்புதுமையை நிகழ்த்தும் வேளையில், அன்னை மரியா அருகில் நிற்பதுபோன்று, இந்தக் காட்சி வரையப்பட்டுள்ளது. ஆனால், புதுமை நிகழ்ந்த வேளையில், அன்னை மரியா அங்கிருந்ததாக நற்செய்தி கூறவில்லை. இதுதான், அன்னை மரியாவின் அழகு, இதுவே அவரது இலக்கணம். குறைகள் உருவானதும் வந்து நிற்கும் அன்னை மரியா, அவரது பரிந்துரையால் புதுமைகள் நிகழும் வேளையில், அந்தப் புகழில் பங்கேற்காமல் மறைந்து விடுவார்.

நல்ல காரியம் ஒன்று நடக்கும்போது, அதற்கு எவ்வகையிலும் காரணமாக இல்லாத பலரும், அது தன்னால் நிகழ்ந்தது என்பதை, பல வழிகளிலும் பறைசாற்றிக் கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம். மக்களின் வரிப்பணத்தில், வறியோருக்கு உதவிகள் செய்யப்படும் வேளையில், அந்த உதவிகளை தங்கள் சொந்தப் பணத்தில் செய்வதுபோல் அரசியல் தலைவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம், நம்மைத் தலைகுனிய வைக்கிறது. அதே வேளையில், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தாங்கள் செய்யும் நற்செயல்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பதையும் நாம் அறிவோம். இவர்களைப்பற்றிக் கேள்விப்படும்போது, மனிதகுலத்தின் மீது நம் நம்பிக்கை வளர்கிறது.

பேரும், புகழும் தேடாத அன்னை மரியாவின் பண்பு, இயேசுவிடமும் வெளிப்படுவதைக் காண்கிறோம். அவர் ஆற்றிய பல புதுமைகளில், தன்னைப்பற்றிய விளம்பரங்கள் செய்யக்கூடாது என்ற கண்டிப்பான கட்டளைகளை இயேசு விடுத்தார் என்பதை நாம் அறிவோம். தன்னையே மறைத்து நற்செயல்கள் செய்யும் அன்னைமரியாவை மனதில் வைத்து, இயேசு புகழ்பெற்ற ஒரு வாக்கியத்தை மலைப்பொழிவில் கூறியுள்ளார்: "நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்." (மத்தேயு 6:3)

கானா திருமண விருந்துக்குத் திரும்புவோம். "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று மரியன்னை சொன்னதைக் கேட்ட பணியாளர்களுக்குக் குழப்பம். மரியன்னை 'அவர்' என்று குறிப்பிட்டுச் சொன்ன அந்தப் புது மனிதரை அவர்கள் அதுவரைப் பார்த்ததில்லை. அந்த இளைஞனைப் பார்த்தால், பிரச்சனையைத் தீர்த்துவைப்பவர் போல் அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்தாலும், கடந்து மூன்று அல்லது நான்கு நாட்களாய் தங்களுடன் சேர்ந்து அதிகம் வேலைகள் செய்தவர் மரியன்னை என்பதால், அவர் மட்டில் பணியாளர்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. அதுவும் அந்த அன்னை அதுவரை, பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்ததைக் கண்கூடாகப் பார்த்தவர்கள் அவர்கள். எனவே, அந்த அன்னை சொன்னால், அதில் ஏதோ ஓர் அர்த்தம் இருக்கும் என்று அவர்கள் நம்பினர். மேலும், அந்த இளைஞன், அந்த அம்மாவுடைய மகன் என்றும் கேள்விப்பட்டதால், அவர் சொல்வதைக் கேட்பதற்கு அவர்கள் மனம் ஓரளவு பக்குவப்பட்டிருந்தது.

பணியாளர்கள் இப்படி சிந்தித்துக்கொண்டிருந்தபோது, இயேசு தன்னைச் சுற்றிலும் பார்த்தார். அவர்கள் நின்றுகொண்டிருந்த முற்றத்தில், கை, கால் கழுவுவதற்கென கல்தொட்டிகள் இருந்தன. யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும் (யோவான் 2:6) என்று நற்செய்தியாளர் யோவான் அச்சூழலை விவரிக்கிறார்.

இயேசு பணியாளரிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" (யோவான் 2:7) என்றார். இயேசு இப்படிச் சொன்னதும், பணியாளர்கள் மனதில் ஓடிய எண்ணங்களைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். இந்தக் காட்சியை, நாம் வாழும் காலத்திற்கு ஏற்றது போல் சொல்லவேண்டுமெனில், ஒரு கிராமத்தில், அல்லது ஒரு சிற்றூரில் நடக்கும் திருமண வைபவத்தைக் கற்பனை செய்துகொள்வோம். கை, கால் கழுவ, குழாய் வசதி இல்லாத இடங்களில், பெரிய பாத்திரங்களில், அல்லது, பிளாஸ்டிக் வாளிகளில், விருந்து மண்டபத்திற்கு வெளியே, தண்ணீர் வைத்திருப்பார்கள். அந்தப் பாத்திரங்களுக்குப் பதில், ஒரு சில இடங்களில், சிமென்ட் தொட்டிகளிலும் தண்ணீர் இருக்கும். அந்தத் தண்ணீரை எடுத்து யாரும் குடிப்பதில்லை, இல்லையா? அத்தகையப் பாத்திரங்களில், அல்லது தொட்டிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னார் இயேசு.

தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப இயேசு சொன்னதும், பணியாளர்களுக்கு அதிர்ச்சியாக, கொஞ்சம் எரிச்சலாகவும் இருந்திருக்கும். பந்தியில் பரிமாற திராட்சை இரசம் இல்லையென்று அலைமோதிக் கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு கட்டளையை இயேசு தருவார் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விருந்தினர்கள் எல்லாரும் கை, கால் கழுவிவிட்டு பந்தியில் அமர்ந்துவிட்டதால், அந்தத் தொட்டிகளில் தண்ணீர் ஏறக்குறைய காலியாகிவிட்டது. அவற்றில் மீண்டும் நீர் நிரப்ப வேண்டியது பணியாளர்களின் கடமை. அந்தக் கடமையை அவர்கள் சரிவரச் செய்யவில்லை என்பதை இயேசு சொல்லாமல் சொல்கிறாரோ என்று அவர் மீது எரிச்சல். தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்கும், திராட்சை இரசம் கிடைப்பதற்கும் என்ன தொடர்பு?

மேலும், திராட்சை இரசம் இருக்கவேண்டிய இடம், தோல் பைகளே தவிர, கல்தொட்டிகளில் அல்ல. இதையும் பணியாளர்கள் நன்கு அறிந்திருந்தனர். திருமணத்திற்கென்று நிரப்பப்பட்டிருந்த தோல் பைகள் அனைத்திலும் திராட்சை இரசம் தீர்ந்திருந்திருந்த வேளையில், அந்தப் பைகளில் தண்ணீரை நிரப்பச் சொல்லியிருந்தாலும், அது பொருத்தமான ஒரு கட்டளையாக அவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், இந்த இளைஞனோ, கல்தொட்டிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னது, பொருத்தமே இல்லாத ஒரு கட்டளையாகத் தெரிந்தது.

பொருத்தமற்றதாக, பொருளற்றதாகத் தெரியும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், அற்புதங்கள் நிகழும் என்பதை, விவிலியத்தில் பல இடங்களில் நாம் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, சிரியா நாட்டின் படைத்தலைவன் நாமான், தன் தொழுநோயைக் குணமாக்க, இறைவாக்கினர் எலிசாவிடம் சென்றபோது, அவர் "நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்" (2 அரசர்கள் 5: 10) என்று சொல்லி அனுப்பினார். எலிசா தன் முன் வந்து நின்று, தன் கடவுளின் பெயரைச் சொல்லி தன் மீது கைவைத்து குணப்படுத்துவார் (2 அர. 5:11) என்று எதிர்பார்த்த நாமான், சினமுற்று தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல நினைத்தபோது, அவரது வேலைக்காரர்கள் அவரை அமைதிப்படுத்தி, இறைவாக்கினர் தந்த கட்டளையை நிறைவேற்றுமாறு வேண்டிக்கொண்டனர். எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது. (2 அர. 5:14)

திராட்சை இரசம் இல்லை என்ற குறையைத் தீர்ப்பதற்கு, "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்று இயேசு தந்த கட்டளை பொருத்தமற்றதாக, பொருளற்றதாகத் தெரிந்ததால், பணியாளர்கள் தடுமாறி நின்றனர். இயேசுவின் கட்டளையைத் தட்டிக் கழிக்கவும் அவர்களுக்கு மனமில்லை.

பொதுவாகவே, திருமண இல்லங்களில் பணியாளர்களின் பாடு மிகவும் கடினமான ஒன்று. பலரும் கட்டளையிடுவார்கள். பல பக்கங்களிலிருந்தும் ஏச்சும் பேச்சும் அவர்கள் கேட்க வேண்டியிருக்கும். யார் சொல்வதையும் தட்டிக்கழிக்க முடியாது. யாரையும் பகைத்துக்கொள்ள முடியாது. யார் முக்கியம், முக்கியமில்லை என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. எனவே, எல்லாருடைய போக்குப்படியும் நடக்கவேண்டும். அதுதான் பாதுகாப்பான வழி.

கானாவூர் பணியாளருக்கும் இதேநிலை. அந்த இளைஞன் சொன்னதை பேசாமல் செய்து விடுவது நல்லது என்று நினைத்தனர். அந்நேரத்தில், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று மரியன்னை சொல்லிச் சென்ற சொற்கள் அவர்கள் உள்ளத்தில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தன. மேலும், தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்று அந்த இளைஞன் சொன்னபோது, அந்தக் கட்டளையில் ஒலித்த ஒரு தனிப்பட்ட அதிகாரம் அவர்கள் மனதில் எழுந்த பல குழப்பங்களை அமைதிப்படுத்தியதைப் போல் உணர்ந்தனர். தாயின் தாலாட்டுக் குரலில் கட்டுண்டு நம்பிக்கையோடு கண்ணுறங்கும் குழந்தையைப் போல், இயேசுவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் தொட்டிகளை நிரப்ப ஆரம்பித்தனர். புதுமையும் நிகழ ஆரம்பித்தது. இந்தப் புதுமை, எப்போது, எப்படி நிகழ்ந்தது என்பதை நாம் அடுத்தத் தேடலில் ஆழமாகச் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.