சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

மறைக்கல்வியுரை : நம் வாழ்வை முழுமையாக காணிக்கையாக்க அழைப்பு

புதன் மறைக்கல்வியுரையின்போது - REUTERS

28/02/2018 15:19

பிப்.,28,2018. இவ்வாரம் திங்களன்று அதிகாலை உரோம் நகரிலும் இத்தாலியின் பல பகுதிகளிலும் பனிப்பொழிவு இடம்பெற்றிருக்க, பனி முழுவதும் கரைந்து விடாத நிலையில், குளிரின் தாக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தமையால், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெற்றது. மாற்கு நற்செய்தி 6ம் பிரிவில் கூறப்பட்டுள்ள, 'ஐயாயிரம் பேருக்கு உணவளித்த புதுமை' குறித்த பகுதி முதலில் வாசிக்கப்பட, திருப்பலி குறித்த தன் மறைக்கல்வி உரையைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

(அப்பொழுது இயேசு, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்”என்று கூற, அவர்களும் பார்த்துவிட்டு, “ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன” என்றார்கள். அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார்…….அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார்.- மாற்கு 6, 38-39.41).

அன்பு சகோதர சகோதரிகளே, திருப்பலி குறித்த நம் மறைக்கல்வி உரையில் இன்று, வார்த்தை வழிபாட்டிலிருந்து, நற்கருணை வழிபாடு நோக்கிச் செல்வோம்.

'இதை என் நினைவாகச் செய்யுங்கள்', என இயேசு தன் இறுதி இரவு உணவின்போது கூறிய வார்த்தைகளைப் பின்பற்றும் விதமாக திருஅவை, இயேசு தன் சிலுவை எனும் பீடத்தில் முத்திரையிட்டு வழங்கிய புதிய உடன்படிக்கையின் பலியை, ஒவ்வொரு திருப்பலியிலும்  அருளடையாள முறையில் நம் முன் கொணர்கிறது. நற்கருணை வழிபாட்டின் துவக்கம், அப்பம் மற்றும் திராட்சை இரசத்தின் காணிக்கை தயாரிப்புடன் இடம்பெறுகிறது. பின்னர், இவை திருநற்கருணை வழிபாட்டு செபத்தில் அர்ப்பணிக்கப்பட்டு, திருநற்கருணை விருந்தில் விசுவாசிகளால் பெறப்படுகிறது. கொடைகளின் தயாரிப்பு வழிபாட்டுமுறையானது, நாம் திருப்பலிமேடைக்குக் கொணரும் காணிக்கைப் பொருட்களுடன், நம் வாழ்வையும் ஆன்மீகக் காணிக்கையாக வைக்க வேண்டும் எனக் கேட்கிறது. இந்த வழிபாட்டு முறையை நிறைவு செய்யும் செபமானது, திருஅவையின் காணிக்கை, தூய ஆவியானவரால் மாற்றம் பெற்று இயேசுவின் சிலுவைப்பலியுடன்கூடிய ஒன்றிப்பில் தந்தையாம் இறைவனுக்கு உகந்த பலியாக மாறும் என்ற நம் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. புனிதத்துவத்தில் வளர்வதற்கான நம் அழைப்பை முழுமையாக வாழ்வதற்கான அருளை இறைவனிடமிருந்து பெறவும், இறையரசின் வருகைக்கு சேவையாற்றவும் உதவும் நோக்கில், நம் வாழ்வை முழுமையாக இறைவனுக்கு காணிக்கையாக்கும் அழைப்பை, ஒவ்வொரு திருப்பலியின் காணிக்கை பொருள்களின் தயாரிப்புச் சடங்கில் அனுபவிப்போமாக.

இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் கூடியிருந்தோருக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

28/02/2018 15:19