2018-02-28 16:11:00

அரியவகை நோய்கள் உலக நாளுக்கு கர்தினால் டர்க்சன் செய்தி


பிப்.28,2018. மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், அரியவகை நோய்களால், இன்னும் துன்புறும் 40 கோடிக்கும் அதிகமானோரைக் குறித்து, நாம் முழுவதும் அறிய முடியாத நிலையில் இருக்கிறோம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளன்று கடைபிடிக்கப்படும் அரியவகை நோய்கள் உலக நாளையொட்டி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்வாண்டு பிப்ரவரி 28ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட 11வது அரியவகை நோய்கள் உலக நாளுக்கு, "உங்களைச் சுற்றியுள்ள அரிதானவர்களைப் போல, நீங்களும் அரிதானவர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள்" என்ற மையக்கருத்து தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அரியவகை நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிப்பது இலாபம் தராது என்பதால், மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், இந்நோய்கள் குறித்து அக்கறை காட்டுவதில்லை என்பது, வருத்தம் தரும் உண்மை என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக நலவாழ்வு நிறுவனத்துடன் உலக அரசுகள் இணைந்து செயலாற்றினால், அரியவகை நோய்களால் துன்புறுவோருக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.