2018-02-28 16:25:00

எருசலேம் புனிதக் கல்லறைக் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது


பிப்.28,2018. பல கடினமானச் சூழல்கள் எழுந்தாலும், புனித பூமியில் உள்ள ஆலயங்களின் வழியே கிறிஸ்தவ பிரசன்னமும், பணிகளும் தொடர்வதற்காக, இறைவனுக்கு நன்றி கூறுகிறோம் என்று புனித பூமியில் பணியாற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் கூறியுள்ளனர்.

எருசலேமில், கடந்த மூன்று நாட்களாக மூடிவைக்கப்பட்டிருந்த புனிதக் கல்லறைக் கோவிலின் கதவுகள், பிப்ரவரி 28, இப்புதன் அதிகாலை நான்கு மணிக்குத் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ தலைவர்கள் இறைவனுக்கு நன்றி கூறியுள்ளனர்.

எருசலேமில், கிறிஸ்தவ கோவில்கள் கட்டப்பட்டிருக்கும் நிலங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று, இஸ்ரேல் அரசு பரிந்துரைத்த சட்ட வரைவு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில், இயேசுவின் கல்லறையை உள்ளடக்கிய ஆலயத்தை மூடுவதற்கு கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், ஆர்மேனிய சபைத் தலைவர்கள் பிப்ரவரி 25ம் தேதி முடிவெடுத்தனர்.

இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ (Benjamin Netanyahu) அவர்கள், தன் அரசின் சட்டவரைவுக் கொள்கையை நிறுத்தி வைப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ உலகின் மிக முக்கிய திருத்தலமான, இயேசுவின் கல்லறைக் கோவில், இப்புதனன்று மீண்டும் திறக்கப்பட்டது.

ஒரே இறைவனில் நம்பிக்கை கொண்டுள்ள கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய மதங்களைச் சார்ந்தவர்கள், புனித பூமியில் நல்லிணக்கத்துடன் வாழ்வதையே தாங்கள் விரும்புவதாக, கிறிஸ்தவ தலைவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.