2018-02-28 16:35:00

ஒயிட் ஹெல்மெட்ஸ் அமைப்பு, சிரியா - உயிர்காக்கும் ஒப்பற்ற பணி


பிப்.28,2018. சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் இடங்களில் வெள்ளை நிற தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் விரைந்து செல்லும் வீரர்கள் நாலாப் பக்கமும் ஓடிச்சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுகிறார்கள்.

சிரிய - இரஷ்ய கூட்டுப் படைகளின் தாக்குதலால் ஒவ்வொரு நாளும் தரைமட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கிக் கிடக்கும் சிரியாவின் குடிமக்களை மருத்துவனைகளில் சேர்க்கும் பணியை வெள்ளை நிற தலைக்கவசம் (White helmets) என்ற தன்னார்வ அமைப்பு செய்து வருகிறது.

ஜேம்ஸ் லி மெசுரியர் (James Le Mesurier) என்பவர் நிறுவிய இந்த அமைப்பில் 3000த்திற்கும் அதிகமான தன்னார்வலர்கள் உள்ளனர். இவ்வமைப்பில், பெண் தன்னார்வலர்களும் பணியாற்றுகின்றனர்.

சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கிய 2014 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிவரும் ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பில் பெரும்பாலனவர்கள், பொறியாளர்கள், ஓவியர்கள், வங்கி அதிகாரிகள், மற்றும் மாணவர்கள் ஆவர்.

இதுவரை போர் நடைபெறும் இடங்களிலிருந்து சுமார் 99,220 உயிர்களை காப்பாற்றியுள்ளனர் ஒயிட் ஹெல்மெட் அமைப்பினர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

மீட்புப் பணிகள் மட்டுமல்லாது வானிலிருந்து கட்டிடங்களை நோக்கி குண்டுகள் விழும்போது எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியையும் சிரிய மக்களுக்கு அளிக்கும் இவ்வமைப்பினர், சிரியாவின் போர் பகுதிகளில் நடக்கும் அட்டூழியங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஆபத்து நிறைந்த இப்பணியை ஒவ்வொரு நாளும் ஆற்றிவரும் இவ்வமைப்பைச் சார்ந்தவர்களில், இதுவரை, 159 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. 

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.