2018-02-28 15:12:00

ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து சவாலை எதிர்கொள்வோம்


பிப்.28,2018. பிப்ரவரி 28, இப்புதனன்று அரியவகை நோய்களின் உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவேண்டுமென்ற விண்ணப்பத்தை, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

"நாம் இயேசுவிடமிருந்து சக்தியைப் பெறும்போது, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, ஒவ்வொரு வகையான சவாலையும் துணிவுடன், நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியாயின.

புற்றுநோய், தொழுநோய், எய்ட்ஸ் போன்ற குறிப்பிட்ட நோய்களுக்கு உலக நாள்கள் உருவாக்கப்பட்டிருப்பதைப் போல, அரியவகை நோய்களின் உலக நாள், ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி இறுதி நாளன்று கடைபிடிக்கப்படுகிறது.

இந்த உலக நாள், 2008ம் ஆண்டு, பிப்ரவரி 29ம் தேதி முதல் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, அரிதாக வரும் பிப்ரவரி 29ம் தேதியன்று துவக்கப்பட்ட அரியவகை நோய்களின் உலக நாள், இவ்வாண்டு, 11வது முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அரியவகை நோய்கள் குறித்த விழிப்புணர்வைக் கொணரும் வகையில், இந்நோய்களுக்கென உருவாக்கப்பட்ட ஐரோப்பிய நிறுவனமான EURORDISன் பரிந்துரையைப் பின்பற்றி, உலகின் பல நாடுகளில், இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.