2018-02-28 15:20:00

நோயுற்றோரின் துன்பங்களைக் குறைக்க சூழ இருப்பவரின் அன்பு..


பிப்.28,2018. நோயுற்றோரின் வேதனைகளைக் குறைக்கும் பராமரிப்பு என்ற தலைப்பில், வத்திக்கானில், இப்புதனன்று நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கிற்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள்,  திருத்தந்தையின் பெயராலும், தன் சார்பாகவும், மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வாழ்வை ஆதரிக்கும் முயற்சிகளை ஒருங்கிணைக்கும், வாழ்வு திருப்பீட கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கிற்கு, இத்திருப்பீட கழகத்தின் தலைவர், பேராயர் வின்சென்சோ பாலியா அவர்களுக்கு, கர்தினால் பரோலின் அவர்கள் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

"எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்" (திருப்பாடல் 89:12) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறியுள்ள சொற்களை, தன் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இத்தகைய ஞானத்தைப் பெறுவதற்குப் பதில், வாழ்நாளை நீட்டிக்கும் அறிவை வளர்ப்பதில் இவ்வுலகம் முனைப்புடன் செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.

நோயுற்றோரின் துன்பங்களைக் குறைப்பதற்கு, மருந்துகள் மட்டும் போதாது, மாறாக, சூழ இருப்பவரின் அன்பு, அக்கறை ஆகியவைகளும் தேவைப்படுகின்றன என்று கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

நோயுற்றோரின் வேதனைகளைக் குறைக்கும் மருத்துவ முறைகளுக்கு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் அளித்த உத்தரவை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், வேதனையைக் குறைப்பது என்ற பெயரில், உயிரைப் போக்கும் முறைகளை திருஅவை ஒருபோதும் அனுமதிக்காது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.