2018-02-28 15:59:00

நோயுற்றோரின் வேதனையைக் குறைக்கும் பராமரிப்பு - கருத்தரங்கு


பிப்.28,2018. நோயுற்றோரின் வேதனையைக் குறைப்பது பயனற்ற முயற்சி என்ற எண்ணத்தில் இவ்வுலகம் வளர்ந்துவரும் வேளையில், இந்த பராமரிப்பைக் குறித்த சரியான கண்ணோட்டமும், புரிதலும் அவசியம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

வாழ்வை ஆதரிக்கும் முயற்சிகளை ஒருங்கிணைக்கும், வாழ்வு திருப்பீட கழகத்தால், பிப்ரவரி 28 இப்புதனன்று நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில், இக்கழகத்தின் தலைவர், பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள்  துவக்க உரை வழங்கிய வேளையில் இவ்வாறு கூறினார்.

வேதனையைக் குறைப்பது, பயனற்ற முயற்சி என்ற தவறான எண்ணத்தைப் போக்குதல், வேதனையைக் குறைக்கும் முயற்சியில் பலரும் இணைந்து செயல்படுதல், வாழ்வை ஆதரிக்கும் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் வாழ்வு திருப்பீட கழகத்தின் செயல்திட்டங்கள் என்ற மூன்று கருத்துக்களை பேராயர் பாலியா அவர்கள் தன் உரையில் விவரித்துக் கூறினார்.

உலகில் உள்ள அனைத்து நோய்களையும் நம்மால் குணமாக்க முடியாது என்றாலும், நோயுற்றோரின் வேதனையைக் குறைப்பது நம் கரங்களில் உள்ளது என்றும், குணமாக்கவே முடியாத நோய்கள் இவ்வுலகில் இல்லை என்றும் நம்புவதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும் என்று பேராயர் பாலியா அவர்கள் தன் உரையில் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.