சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை : பெரியவரிடம் கண்ணாடி பாடம் கற்ற இளைஞன்

கண்ணாடியின் முன் நடந்து செல்கிறார் ஒரு முதியவர் - AP

01/03/2018 11:33

அந்தப் பெரியவர் தன் கையில் ஒரு கண்ணாடியை வைத்துக்கொண்டு அதை அடிக்கடி பார்ப்பதும், பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவதுமாக இருந்தார். இதைக் கவனித்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு இளைஞன், அது என்ன மாயவித்தை கண்ணாடியோ என்று குழம்பினான். தன் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரியவரிடமே சென்று கேள்விகளை அடுக்கினான் அவன். ஐயா, உங்கள் கையில் இருப்பது சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடிதானே? பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான் இளைஞன். அவனைப் பார்த்து புன்னகைத்த பெரியவர், தம்பி, அது சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய உள்ளன என்றார். பாடமா? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் கற்க முடியும்? என்று கேட்டான் இளைஞன். அப்படிக் கேள் தம்பி என்று, கண்ணாடி பற்றிய தன் எண்ணங்களை இளைஞனிடம் பகிர்ந்துகொண்டார் அந்தப் பெரியவர்.

நாம் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள். ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும், எப்படி திருத்த வேண்டும் என்பதையெல்லாம் கண்ணாடி கற்றுத் தருகிறது. நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டுவிட்டால், கண்ணாடியில் அது தெரிகிறது. கண்ணாடி, அந்தக் கறையைக் கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. அதேபோல், நீ உன் உடன்பிறப்புக்களிடம் அல்லது நண்பர்களிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகைப்படுத்த, அதாவது துரும்பைத் தூண் ஆக்கவோ அல்லது, மடுவை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம். அடுத்து, கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையை அது காட்டுகிறது. நீ அகன்றுவிட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதேபோல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாதபோது முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம். மேலும், ஒருவருடைய முகக்கறையைக் கண்ணாடி காட்டியதால், அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுவதில்லை. அதேபோல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம். பெரியவர் சொல்லி முடித்ததும், ஐயா, இனி கண்ணாடி முன்னால் நிற்கும்போதெல்லாம் இந்த அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும். அருமையான விளக்கம். நன்றி என்று விடைபெற்றான் இளைஞன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

01/03/2018 11:33