2018-03-01 14:51:00

"முழு இதயத்தோடு, இறைவனிடம் திரும்பி வர, தவக்காலம்"


மார்ச்,01,2018. "நம் முழு இதயத்தோடும், நம் வாழ்வின் ஒவ்வோர் அம்சத்தோடும், இறைவனிடம் திரும்பி வருவதற்கு, அவர், ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தை வழங்கியுள்ளார்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வழங்கியுள்ளார்.

மேலும், நாம் பயணிக்கும் இந்த தவக்காலம், நம்மை மனமாற்றத்திற்கும், நம்பிக்கையை மீண்டும் நம்முள் தூண்டியெழுப்புவதற்கும் உதவியாக அமையட்டும் என்று, திருத்தந்தை, இப்புதனன்று, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் கூறினார்.

பிப்ரவரி 28, இப்புதனன்று, திருத்தந்தையின் மறைக்கல்வி உரை, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, கடும் குளிர் காரணமாக, அது, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்திற்கு, இறுதி நேரத்தில் மாற்றப்பட்டதையடுத்து, அரங்கத்தினுள் செல்ல இயலாத மக்கள், புனித பேதுரு பசிலிக்காவில் கூடியிருந்தனர்.

அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் தன் மறைக்கல்வி உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காவில் கூடியிருந்தோரைச் சந்தித்து, அவர்களுக்கு குறுகிய ஓர் உரையை வழங்கிய வேளையில், தவக்காலத்தில், பிறரன்பின் சாட்சிகளாக வாழ்வதில் சலிப்படையக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

அன்னை மரியாவின் துணையோடு, தவக்காலப் பயணத்தை நிறைவு செய்து, பாஸ்கா மறைப்பொருளில் முழுமையாகப் பங்கேற்போம் என்று கூறிய திருத்தந்தை, பசிலிக்காவில் கூடியிருந்த அனைவருக்கும், தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.