2018-03-03 15:45:00

உரோம் சான் எஜிதியோ மையத்திற்கு ஜூன் 11ல் திருத்தந்தை


மார்ச்,03,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் இயங்கும், சான் எஜிதியோ பிறரன்பு அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டையொட்டி, இம்மாதம் 11ம் தேதி மாலை 4.30 மணிக்கு, உரோம் Santa Maria in Trastevere வளாகம் சென்று, அந்த அறக்கட்டளை உறுப்பினர்களைச் சந்திப்பார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர், Greg Burke அவர்கள், அறிவித்துள்ளார்.

மேலும், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் பிரச்சனைக்கு கத்தோலிக்கத் திருஅவை எவ்வாறு பதிலளித்து வருகின்றது என்பது குறித்து கலந்துரையாடும் நோக்கத்தில், மார்ச் 6, வருகிற செவ்வாயன்று உரோம் நகரில் மூன்று நாள் பன்னாட்டு கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

மார்ச் 08, வருகிற வியாழன் வரை நடைபெறும், இந்த பன்னாட்டு கூட்டத்தில், தேசிய ஆயர் பேரவைகள், திருப்பீடம், ஐக்கிய நாடுகள் நிறுவனம், மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் மத்தியில் பணியாற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இக்கூட்டத்தில், 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான, வரைவு திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.