2018-03-03 14:30:00

செவிலியரே, இயேசுவைப் போன்று நோயுற்றோரைத் தொடுங்கள்


மார்ச்,03,2018. நோயுற்றோரைப் புரிந்துகொள்வதற்கு, இரக்கம் என்ற பண்பு முக்கியமானது, மற்றும், நோயுற்றோர் குணமடைவதற்கும் இது விலைமதிப்பற்ற மருந்தாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செவிலியர் குழு ஒன்றிடம் இச்சனிக்கிழமையன்று கூறினார்.

IPASVI எனப்படும், செவிலியர், நலவாழ்வுக்கு உதவுவோர் மற்றும், குழந்தைகளைப் பராமரிப்போரைக் கொண்ட இத்தாலிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில், இச்சனிக்கிழமையன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நலவாழ்வுப் பணியாளர்களுக்கும், நோயுற்றோருக்கும் இடையேயுள்ள உறவு பற்றித் தெரிவித்தார்.

பெண்கள், ஆண்கள், குழந்தைகள், வயதானவர்கள் போன்ற வாழ்வின் எல்லா நிலைகளிலும் உள்ள நோயுற்றோருக்குச் சிகிச்சை வழங்கும்போது, அவர்கள் சொல்வதையும், தொடர்ந்து கேட்கவேண்டிய நிலையிலுள்ள நலவாழ்வுப் பணியாளர்கள், இதில் சோர்வடைய வேண்டாம் என்றும், நலவாழ்வுப் பணியாளர்கள், வாழ்வையும், மனித மாண்பையும் ஊக்குவிப்பவர்கள் என்றும், திருத்தந்தை கூறினார்.

நலவாழ்வுப் பணியாளர்கள், நோயுற்றோரை அணுகும்போது, இயேசு நோயுற்றோரிடம் நடந்துகொண்டதுபோன்று செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நலவாழ்வுப் பணியாளர்கள், நோயுற்றோரைப் பராமரிக்கும்போது, அதிகபட்சமாக தங்களை ஈடுபடுத்தி, தங்களுக்குத் தேவையான மனஅமைதியை இழக்காமல் இருப்பதில் கவனமாக இருக்குமாறும் கூறினார்.

நோயுற்றோரும், தங்களைப் பராமரிப்பவரிடம் நன்றியுடன் நடந்துகொள்ளும்படிக் கூறியத் திருத்தந்தை, IPASVI கூட்டமைப்பினர், இந்நாள்களில் நடத்தும் மாநாட்டிற்கு, தனது வாழ்த்தையும், செபங்களையும் தெரிவித்ததுடன், தனக்காகச் செபிக்குமாறும்    கேட்டுக்கொண்டார்.

IPASVI கூட்டமைப்பு, இத்தாலியிலுள்ள மிகப்பழமையான அமைப்புகளில் ஒன்று எனவும், இதில் ஏறத்தாழ 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செவிலியரின் பணி. உண்மையிலேயே எதனாலும் ஈடுசெய்ய முடியாதது எனவும் கூறினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.