2018-03-03 13:21:00

தவக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


சில ஆண்டுகளுக்கு முன், எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில், “புன்னகைக்கும் இயேசு” (“The Smiling Jesus”) என்ற தலைப்புடன், அழகான பல படங்கள் வந்து சேர்ந்தன. அவை அனைத்திலும், இயேசு, குழந்தைகளுடன் விளையாடும் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. அந்த ஓவியங்களில், இயேசு வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார். நான் அதுவரைப் எண்ணிப் பார்த்திராத கோணத்தில் இயேசுவைச் சித்திரித்த அந்த ஓவியங்கள் அனைத்தும், பென்சிலால் வரையப்பட்ட கருப்பு-வெள்ளை படங்கள். ஆனால், அவற்றில் வெளிப்பட்ட உணர்வுகள், அந்த ஓவியங்களை வண்ணமயமாக மாற்றியிருந்தன.

'இந்த ஓவியங்களைக் கோவில்களில் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று எனக்குள் நானே எண்ணிக்கொண்டேன். இதுபோன்ற ‘வித்தியாசமான’ ஓவியங்களை, கோவிலில் பீடமேற்றினால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வியும் உடன் எழுந்தது. இதே கேள்வி, இன்று என் மனதில் மீண்டும் எழுந்துள்ளது. காரணம்? இன்று நாம் நற்செய்தியில் சந்திக்கும் ‘வித்தியாசமான’ இயேசு.

தவக்காலத்தின் முதல் ஞாயிறு, பசியோடு, களைப்போடு இருந்த இயேசுவை, நாம் பாலை நிலத்தில் சந்தித்தோம். இரண்டாவது வாரம், தோற்றமாற்றமடைந்து, ஒளிவெள்ளத்தில் தோன்றிய இயேசுவை, நாம் மலைமீது சந்தித்தோம். தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிறான இன்று, இயேசுவை, எருசலேம் கோவிலில் சந்திக்கிறோம். கோபக்கனல் தெறிக்க, சாட்டையைச் சுழற்றும் இந்த இயேசு, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.

தவக்காலத்தின் மூன்று ஞாயிறுகளிலும் நாம் சிந்தித்த இக்காட்சிகளை ஓவியங்களாகப் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று ஓவியங்களில், பாலை நிலத்திலும், மலைமீதும் நாம் சந்தித்த இயேசுவை, கோவில்களில் பீடமேற்ற தயங்கமாட்டோம். ஆனால், எருசலேம் கோவிலில் நாம் இன்று சந்திக்கும் இயேசுவை பீடமேற்ற தயங்குகிறோம். பொதுவாக, கோவில்களில் நாம் பீடமேற்றும் இயேசுவின் திரு உருவங்கள், சாந்தம் நிறைந்த உருவங்கள், வெற்றிவாகை சூடிய உருவங்கள், அல்லது சிலுவையில் துன்புறும் உருவங்கள். இவ்வளவு அமைதியாய், சாந்தமாய், நாம் கோவில்களில் காணும் இயேசு, எருசலேம் கோவிலுக்குச் சென்றபோது, கோபம் கொண்டார்.

இந்நிகழ்வில், மற்றொரு புதிரையும் நாம் சந்திக்கிறோம். பாலைநிலம், மலை, கோவில் ஆகிய மூன்று இடங்களும் இறைவனைச் சந்திக்கக்கூடிய இடங்கள் என்பது நமக்குத் தெரிந்த உண்மை. இவற்றில், பாலைநிலம், மலை என்ற இயற்கைச் சூழல்களில், இறைவனை, நாம் தேடிச்செல்ல வேண்டும். அவ்வளவு எளிதில் நம் கண்களுக்கு அவர் தெரிவதில்லை. இறைவனை எளிதில் காண்பதற்கென நாம் உருவாக்கிய ஒரு திருத்தலம், கோவில். அந்தக் கோவிலில், இறைமகனாகிய இயேசுவே வந்து நிற்கிறார். அங்கு, அவராலேயே, இறைவனைக் காண முடியாததால், கோபமுற்று, சாட்டையைக் கையில் எடுக்கிறார். இறைவனைக் காண முடியாததால் கோபம் கொண்ட இறைமகனில், நாமும், இறைவனைக் காண முடியாமல் தவிக்கிறோம். எனவேதான், இந்தக் கோணத்தில் இவரைப் பீடமேற்றத் தயங்குகிறோம்.

இயேசுவின் வாழ்வை ஒரு திரைப்படமாக நாம் எண்ணிப் பார்த்தால், அத்திரைப்படத்தில் நாம் கைதட்டி இரசிக்கக்கூடிய ஒரு காட்சி, இயேசு, எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய காட்சி. எந்த ஒரு திரைப்படத்திலும், வில்லன்களை விரட்டியடிக்கும் நாயகனை கைதட்டி இரசிப்போம், இல்லையா? அதையொத்த ஓர் எண்ணம் இது. கோவிலைத் தூய்மைப்படுத்தும் கதாநாயகன் இயேசுவை இன்று சந்திப்போம். அவர் ஏன் எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்த துணிந்தார் என்பதைச் சிந்திப்போம்.

கோவிலுக்குச் சென்றால் நாம் தூய்மை பெறலாம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், இங்கோ இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களின் உயிர்நாடியாக விளங்கிய எருசலேம் கோவிலில், இயேசு கோபத்துடன் நடந்துகொண்ட காரணத்தைப் புரிந்துகொள்வது பயனளிக்கும்.

எருசலேம் கோவிலில், அல்லது கோவிலைச் சுற்றி, அன்று நடந்த நிகழ்வுகளுக்கும், இன்று நம் திருத்தலங்களில் காணும் பல நிகழ்வுகளுக்கும் நெருங்கிய ஒப்புமை இருந்தால், நாம் கேள்விகளை எழுப்பவும், பதில்களைத் தேடவும் கடமைப்பட்டுள்ளோம். எருசலேம் கோவிலைச் சந்தையாக மாற்றியவர்களை, சாட்டை கொண்டு விரட்டியடித்த இயேசு, இன்று, நம் கோவில்களுக்கு வந்தால், என்ன நினைப்பார், எப்படி நடந்துகொள்வார் என்பதைச் சிந்தித்துப்பார்க்க, இந்த ஞாயிறு, நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார் - யோவான் 2: 13 என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பாஸ்கா விழாவையொட்டி எருசலேமுக்குச் செல்லவேண்டும், அந்த ஆண்டுக்குரியக் காணிக்கையை, கோவிலில் செலுத்தவேண்டும். இது இஸ்ரயேல் மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளை. இயேசுவும் ஒரு யூதருக்குரிய கடமைகளை நிறைவேற்ற கோவிலுக்குச் சென்றார். அங்கு சென்றவர், அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார்.

ஏற்கனவே, 12 வயது சிறுவனாக, முதல்முறை, எருசலேம் கோவிலுக்குச் சென்றபோது, அங்கு அவர் கண்ட ஒரு சில காட்சிகள், அவரைப் பாதித்திருக்க வேண்டும். அதன்பின், ஒவ்வோர் ஆண்டும், அவர் அங்கு சென்றபோதெல்லாம், அவர் உள்ளத்தை வேதனையும், கேள்விகளும் நிறைத்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அந்த வேதனைகளுக்கும், கேள்விகளுக்கும் விடைதேடி வந்த இயேசு, இன்று தானே விடையாக மாறத் துணிந்தார்.

இயேசுவுக்குள் இத்தனைக் கேள்விகளும் வேதனைகளும் உருவாகக் காரணம்... ஏழைகளும், புற இனத்தாரும் அடைந்த துன்பங்கள். ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், ஏழை யூதர்கள் அடைந்த வேதனைகளை இயேசுவும் அடைந்திருப்பார். இறைவனைக் காணும் ஆர்வத்தோடு, வறியோர், ஆண்டு முழுவதும் சிறுகச் சிறுகச் சேமித்து, எருசலேம் கோவிலுக்கு சென்றபோது, அவர்கள் அங்கு சந்தித்தப் பிரச்சனைகள் பல. ஆண்டவனுக்குக் காணிக்கை செலுத்தவேண்டும் என, ஆண்டு முழுவதும், தங்கள் வீடுகளில், கண்ணும் கருத்துமாய், அவர்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, புறா போன்ற காணிக்கைகளைக் குருக்களிடம் கொண்டு சென்றபோது, அந்தக் காணிக்கைகளில் ஏதாவது ஒரு குறை கண்டனர் குருக்கள். குறையுள்ள காணிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். சரியான காணிக்கையைச் செலுத்தவில்லையெனில் கடவுள் அவர்களைப் புறக்கணித்துவிடுவார் என்ற அச்சத்தை, வறியோர் மீது, குருக்கள் திணித்தனர். எனவே, அந்த ஏழைகள், கோவிலில், அநியாய விலைக்கு விற்கப்பட்ட ஆடு, மாடு, புறா இவற்றை வாங்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஆண்டு முழுவதும் அவர்கள் சேமித்து வைத்த பணமெல்லாம் ஒரு காணிக்கை வாங்குவதற்கே பற்றாமல் போயிற்று.

அடுத்ததாக, கோவிலுக்குச் செலுத்தவேண்டிய காணிக்கைப் பணமும் பிரச்சனைகளை எழுப்பியது. இஸ்ரயேல் மக்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்திய நாணயம், உரோமைய நாணயம். அந்த நாணயத்தில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததால், அதைக் கோவில் காணிக்கையாகச் செலுத்தக்கூடாது. எனவே, காணிக்கை செலுத்தும் அனைவரும், கோவிலுக்கு வெளியே இருந்த நாணயம் மாற்றுமிடங்களில், தாங்கள் சேமித்து வைத்திருந்த உரோமைய நாணயங்களைக் கொடுத்து, கோவிலுக்கு ஏற்ற நாணயங்களை வாங்கவேண்டும். இந்த வர்த்தகத்திலும் ஏழைகள் அதிகம் ஏமாற்றப்பட்டனர். எருசலேம் கோவிலில் நடந்த காணிக்கைப் பொருட்களின் வியாபாரம், நாணயம் மாற்றும் வியாபாரம் அனைத்திலும், கோவில் குருக்களுக்குப் பங்கு இருந்தது.

நாணயமற்ற முறையில், நாணய மாற்றங்கள் நிகழும் வேளைகளில், ஏழைகள் துன்புறுவது, அன்று மட்டுமல்ல, இன்றும் தொடரும் கொடுமை. இந்தியாவில் நடைபெற்ற பணமுடக்கம், வங்கிகளில் வறியோர் அடையும் சித்ரவதைகள், அதே நேரம், கோடீஸ்வரக் கொள்ளையர்கள் அனுபவிக்கும் சலுகைகள் ஆகியவை, நிச்சயம், இயேசுவை, மீண்டும் சாட்டையை எடுக்கத் தூண்டும் எதார்த்தங்கள்.

 

ஆண்டு முழுவதும் காத்திருந்து, கஷ்டப்பட்டு பணம் சேர்த்து, இறைவனைக் காண எருசலேம் கோவிலுக்குச் சென்றால், அங்கு இறைவனைக் காண இத்தனைத் தடைகள் இருந்தன. தாங்கள் காணவிழைந்த இறைவன், தங்களது ஒருவருட சேமிப்பையெல்லாம் தாண்டி, ஒவ்வோர் ஆண்டும் உயர, உயர விலகிச் செல்கிறாரே என்ற தவிப்பு, வறியோர் மனதை ஆக்கிரமித்தது. இறைவனின் இல்லத்தில், அவரது கண் முன்பாகவே இத்தனை அக்கிரமங்கள் நடக்கின்றனவே என்று, ஆயிரமாயிரம் ஏழைகளும், நேரிய மனத்தவரும் வெந்து, புழுங்கிக் கொண்டிருந்தனர்.

அதே வேதனை, அதே புழுக்கம், யூதர் அல்லாத புற இனத்தவருக்கும் இருந்தது. எருசலேம் கோவிலில் வியாபாரங்கள் நடந்ததெல்லாம் கோவிலின் வெளிச் சுற்றில். இந்த வெளிச்சுற்று, புற இனத்தவர் முற்றம் (The Court of the Gentiles) என்று அழைக்கப்பட்டது. புற இனத்தவர், இந்த வெளிச்சுற்றில் மட்டும் நின்று இறைவனைத் தரிசிக்க அனுமதி உண்டு. இந்த வெளிச் சுற்றில், கடைகள் கூடிவிட்டதால், கடவுள் காணாமல் போய்விட்டார். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காதக் கதையாய், இறைவனைக் காண ஆவலாய் வந்திருந்த புற இனத்தவர், இறைவனைக் காணமுடியாமல், ஏமாற்றம் அடைந்தனர். அவர்களுக்கெனக் குறிக்கப்பட்டிருந்த வெளிச்சுற்றை ஆக்கிரமித்திருந்த சந்தையைக் கண்டு, இறைவன் மீதே ஓரளவு வெறுப்பை வளர்த்துக்கொண்டு வீடு திரும்பவேண்டிய நிலைக்கு, புற இனத்தவர் தள்ளப்பட்டனர்.

ஏழைகளையும் புற இனத்தவரையும் வாட்டியெடுத்த வேதனைகள், இயேசுவையும் வாட்டியெடுத்தன. இந்த வேதனை, கோபமாக வடிவெடுத்தது. ஏழை யூதர்களும், புற இனத்தவரும் கடவுளைச் சந்திக்க முடியாதபடி, ஒரு சந்தையாக, கள்வரின் குகையாக மாற்றப்பட்டிருந்த கோவிலைச் சுத்தம் செய்ய முடிவெடுத்தார் இயேசு.

பாஸ்கா விழா காலத்தில், எருசலேம் கோவிலுக்கு ஒரு இலட்சம் பக்தர்களாகிலும் வந்தனர் என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. அந்த ஒரு இலட்சம் பேருக்குத் தேவையான ஆடு, மாடு, புறா என்ற காணிக்கைகள், கோவிலில் குவிந்திருக்க வேண்டும். தனியொரு மனிதராய், இந்த வியாபாரக் கோட்டையைத் தகர்க்கத் துணிந்த அந்த மனம், சாதாரண மனம் அல்ல... இறைமகன் இயேசு, எருசலேம் கோவிலில் செய்த அந்தப் புரட்சியை நாம் ஒரு புதுமையாகவே பார்க்கவேண்டும். அவ்வளவு பெரிய ஒரு நிறுவனத்தை எப்படி தனியொரு மனிதர் தலைகீழாக மாற்றத் துணிந்தார்? எப்படி அந்த நேரத்திலேயே, அவர் கொல்லப்படாமல் தப்பித்தார்? என்பதெல்லாம் புதுமையே. இந்தப் புதுமையை எண்ணிப்பார்க்க, திருஅவை, இன்று ஒரு வாய்ப்பை நமக்கு அளித்துள்ளது.

கோபக்கனல் தெறிக்க, இயேசு, அந்த வர்த்தகக் கோட்டையைத் தாக்கியபோது, அவர் எந்த அதிகாரத்தில் இவற்றைச் செய்கிறார் என்ற கேள்வி எழுந்தது. இயேசு அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” - யோவான் 2: 19 என்ற சவாலை அவர்கள் முன் வைத்தார் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். 46 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட ஆலயத்தை, மூன்றே நாட்களில் கட்டியெழுப்புவதாக இயேசு சொன்னதை, குழந்தைத்தனமான சவாலாக நாம் பார்க்கலாம்; அல்லது, கடவுளால் மட்டுமே செய்துமுடிக்கக் கூடிய ஓர் அற்புதச் செயலாகவும் கருதலாம்.

இயேசு கூறிய அந்தக் கோவில் அவரது உடல் என்றும் யோவான் தன் நற்செய்தியில் கூறுகிறார் - யோவான் 2: 21. இறைவனுக்கே விலைகுறித்து, வர்த்தகக் கோட்டையாக மாறிய எருசலேம் கோவில், வரலாற்றில் இரு முறை தரைமட்டமாக்கப்பட்டது. இன்றும், அந்தக் கோவில், மோதல்கள் பல உருவாக ஒரு காரணமாக இருந்து வருகிறது. இதற்கு மாறாக, முற்றிலும் தகர்க்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உடல் என்ற கோவிலை கடவுள் மூன்று நாட்களில் மீண்டும் கட்டியெழுப்பினார். இந்தக் கோவில், இருபது நூற்றாண்டுகளைக் கடந்து, உறுதியுடன் நிமிர்ந்து நிற்கிறது. இந்தக் கோவிலில் வியாபாரங்கள் கிடையாது, கடவுளை விலை பேசமுடியாது, வெளிச் சுற்று, உள்சுற்று என்ற பாகுபாடுகள் கிடையாது, வறியோர், செல்வந்தர், பாவி, புண்ணியவான், யூதர், புற இனத்தவர், ஆண், பெண் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் உள்ளே வரலாம். இறைவனை எந்தத் தடையும் இல்லாமல் கண்ணாரக் கண்டு நிறைவடையலாம்.

பாகுபாடுகள் ஏதுமற்ற இறைமக்களின் சமுதாயம் என்ற அழகிய கோவில்கள் உலகெங்கும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம். மதத்தையும், கடவுளையும் மூலதனமாக்கி நடைபெறும் அரசியல் வர்த்தகங்கள் அனைத்திலிருந்தும், உலகை, இறைவன் தூய்மையாக்க வேண்டும் என்று செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.