2018-03-05 15:19:00

"இலத்தீன் அமெரிக்க அவையை கட்டியெழுப்பும் தூணாக..."


மார்ச்,05,2018. பெண்களுக்கு எதிராக நிகழும் அனைத்து வன்முறைகளையும் கண்டனம் செய்யும் வகையில், மார்ச் 8, அனைத்துலக பெண்கள் நாளன்று, உருகுவே நாட்டின் மோந்தேவீதேயோ (Montevideo) உயர் மறைமாவட்டம் இணைந்து வரும் என்று, இம்மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் டேனியல் ஸ்துர்லா (Daniel Sturla) அவர்கள் கூறினார்.

அண்மித்து வரும் அனைத்துலக பெண்கள் நாளையொட்டி, உருகுவே நாட்டின் வானொலி ஒன்றுக்குப் பேட்டியளித்த கர்தினால் ஸ்துர்லா அவர்கள், திருஅவையில் பெண்களைப் பற்றி பேசும் வேளைகளில், தன்னிகரற்ற எடுத்துக்காட்டாக விளங்கும் மரியன்னையைப் பற்றி எப்போதும் பேசுகிறோம் என்பதைக் குறிப்பிட்டார்.

மார்ச் 8ம் தேதி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஒரு கூட்டத்தில் இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் சிலருடன் தானும் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறிய கர்தினால் ஸ்துர்லா அவர்கள், இந்தக் கூட்டத்தில் இலத்தீன் அமேரிக்கா நாட்டைச் சேர்ந்த சில பெண்களும் கலந்துகொள்வர் என்று எடுத்துரைத்தார்.

"இலத்தீன் அமெரிக்க தலத்திரு அவையையும், சமுதாயத்தையும் கட்டியெழுப்பும் தூணாக விளங்குவோர் பெண்கள்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்திருந்த தலைப்புடன் வத்திக்கானில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று கர்தினால் ஸ்தூர்லா அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.