2018-03-05 15:35:00

பிறருக்கு உதவுவதற்கு இறைவன் நம்மைப் பயன்படுத்துகிறார்


மார்ச்,05,2018. “மனத்தாராளத்தில் விஞ்ச இயலாத இறைவன், நம் சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதற்கு, என்னையும் உங்களையும் இன்னும் பயன்படுத்துகிறார்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

இஞ்ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “ஆண்டவரில் ஏனைய மனிதரை நாம் சந்திக்கும்போது, கடவுளின் விந்தைகள் தொடரும் என்பதை, நாம் உறுதியாக நம்பலாம்” என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், மரியின் விண்ணேற்பு சிறிய சகோதரிகள் சபையை ஆரம்பித்த அருள்பணியாளர் Stefano Pernet அவர்களின் வாழ்வு பற்றிச் சொல்லும், "நற்செய்தி, கன்னத்தோடு கன்னம் (Il Vangelo guancia a guancia)" என்ற நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மிக ஏழ்மை நிலையில் வாழ்கின்ற மக்களைச் சுத்தப்படுத்தி, அவர்களுக்கு ஆடையணிவிக்கும், எளிய மற்றும் சாதாரண செயல்கள் வழியாக, இந்த சபை சகோதரிகள், வேறெந்த மறையுரைகளையும்விட, இயேசு கிறிஸ்துவைச் சிறப்பாகப் போதிக்கின்றனர்  என்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணி Stefano Pernet அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை தனது முன்னுரையில் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவரின் பணி பற்றி அறிந்த புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1983ம் ஆண்டில், இவரை வணக்கத்துக்குரியவர் என அறிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் புரட்சி இடம்பெற்ற காலத்திற்குப்பின்னர், 19ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில், பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதிகளில் வாழ்ந்த மிகவும் வறிய குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர், அருள்பணி Stefano Pernet. இந்த அருள்பணியாளர் பற்றி, செய்தியாளர் Paola Bergamini அவர்கள் எழுதியுள்ள நூல், மார்ச் 06, இச்செவ்வாய் முதல் புத்தகக் கடைகளில் கிடைக்கும் என்றும், 192 பக்கங்கள் கொண்ட இந்த நூல், மார்ச் 08, வருகிற வியாழன் மாலை 5 மணிக்கு, மிலானில் செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.