2018-03-05 14:53:00

வாரம் ஓர் அலசல் – தாங்காத மடிகள் இல்லை


மார்ச்,05,2018. “பிச்சைக்காரங்கன்னு யாரையும் சொல்ல வேணாம்ண்ணே. நம்மோட அன்றாட வாழ்க்கையில நாமளும், யார்கிட்டேயோ, எதுக்காகவோ பிச்சை எடுத்துட்டுத்தானே இருக்கோம். என்ன அவங்க நேரடியாக கேக்குறாங்க. நாம மறைமுகமா கேக்றோம், அதுதானே வித்தியாசம்”. இவ்வளவு பெரிய தத்துவத்தைச் சாதாரணமாகச் சொன்னவர், தமிழ்நாட்டின் முசிறியைச் சேர்ந்த, 24 வயது நிரம்பிய இளைஞர் நவீன். இவர், சிறந்த சமூக சேவைக்கான இந்திய அரசின் ‘தேசிய இளைஞர் விருது’பெற்றிருக்கிறார். ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களின் சாலையோரங்களில் ஆதரவற்றுச் சுற்றியலைந்த 193 பேருக்கு மறுவாழ்வு அளித்து, அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் நவீன். இந்தச் சேவையை ஆரம்பித்தது பற்றி, ஓர் ஊடகத்திடம் (விகடன்) நவீன் அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார்.

கேட் (GATE - Graduate Aptitude Test in Engineering) தேர்வுக்குப் படிப்பதற்காக, சேலம் பேருந்து நிலையத்திற்கு அருகில், நண்பர்களோடு, சிறிய ஓர் அறையை வாடகைக்கு எடுத்து படித்துக்கொண்டிருக்கும்போதே வீட்டு நினைவு வந்து மனதை மிகவும் கலங்கடிக்கும். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வெளியே பேருந்து நிலையம் பக்கம் சும்மா நடந்துகொண்டிருப்பேன். அப்போதுதான் நம்மைவிட எவ்வளோ மோசமான நிலைமையில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. அன்று, ஒரு பாட்டிக்கு ரொம்பப் பசி போல. குப்பைத் தொட்டியில் இருந்த ஒரு சப்பாத்தியைத் தூசி தட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் என் கையில பத்து ரூபாய்தான் இருந்தது. அந்தப் பாட்டியைக் கூட்டிக்கொண்டுபோய், நாங்கள் இருவரும் இட்லி வாங்கிச் சாப்பிட்டோம். அதற்குப் பிறகு என் நண்பர்களிடமும் காசு கேட்டு, அந்தப் பக்கத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஒவ்வொருவருக்கும் சாப்பாடு வாங்கித்தர ஆரம்பித்தேன். என் அப்பாவுக்கு ஒரு காலால் மட்டும்தான் நடக்க முடியும். முசிறியில், ஒரு சிறிய துணிக் கடையில் அப்பா வேலை செய்கிறார். அம்மா, கடுமையான நோயிலிருந்து இப்போதுதான் மீண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களால் சரியாக நடமாட முடியாது. எனக்கு ஒரு தங்கை. எப்படியாவது நன்றாகப் படித்து, ஒரு பெரிய அரசுப் பணியில் அதிகாரியாக ஆகவேண்டும் என்று, வீட்டில் ஆசைப்பட்டார்கள். அப்படி ஆவேனா எனத் தெரியாது. ஆனால் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டு வருகிறேன் என நினைக்கிறேன்.

இளைஞர் நவீன் அவர்கள், தற்போது, ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறாராம். இச்சேவையை இவர், தனியொரு ஆளாக ஆரம்பித்து, பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்திருக்கிறார். கோவில்கள், பேருந்து, இரயில் நிலையங்கள் போன்ற இடங்களைச் சுற்றி, ஏறத்தாழ  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதுடன், அவர்களின் உற்றார் உறவினர்களின் முகவரியைக் கேட்டு வாங்கி, பலரை உரியவர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார் நவீன். வயிற்றுப்பசிக்குக் கையேந்திக்கொண்டிருந்த பலர், நவீன் அவர்களின் உதவியால் தற்போது காவல் காக்கும் பணியாளர்களாக, ஈரோடு மாவட்டங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறார்களாம். தெருக்களில் சுற்றி அலைகின்றவர்கள், முதலில் நம்மிடம் பேசமாட்டார்கள். ஆனால், தொடர்ந்து அவர்களிடம் பேச வேண்டும். கொஞ்ச நேரத்தில் தன் கதையைச் சொல்லி அழ ஆரம்பித்து விடுவார்கள். நண்பர்களோடு சேர்ந்து அவர்களுக்கு முடிவெட்டி, குளிக்க வைப்போம். ஆடைகளைப் போட்டு விடுவோம். பிள்ளைகள் பக்கத்து ஊரில்தான் இருக்கிறார்கள் என்று தெரிந்தால், அவர்களை அழைத்துவந்து, பெற்றவர்கள் எந்த நிலைமையில இருக்கிறார்கள் என்று பார்க்க வைப்போம். அதுதான், பெற்றோர்களை அநாதைகளாக விட்டுவிட்டுப் போகிற பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய தண்டனை. பிச்சைக்காரர்கள் என்ற சமூகமே ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கனவு. என்னைப் போல இளைஞர்களும் அவரவர்கள் மாவட்டங்களில் இதைச் செய்ய வேண்டும். தர்மம் என்பது, பணம் கொடுத்து உதவுவது மட்டுமில்லை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிச்சைக்காரர்கள் என்று யாரையும் நாம் சொல்ல வேண்டாமே என்று தீர்க்கமாகச் சொல்லும் இளைஞர் நவீன் அவர்களை நாமும் பாராட்டுவோம்.

திருநெல்வேலி சாலையொன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கு அடியில், அப்போதுதான் பிறந்திருந்த கன்றுக்குட்டி ஒன்று மாட்டிக்கொண்டது. தாய்ப் பசு நிலைகொள்ளாமல் அந்தக் காரையே சுற்றி சுற்றி வந்தது. அங்கு நின்றுகொண்டிருந்த ஆண்கள் பலர் சேர்ந்து, காரை மெதுவாகப் பின்புறமாக நகர்த்தி, அந்தக் கன்றுக்குட்டியை பத்திரமாக வெளியே எடுத்தனர். உடனே தாய்ப்பசு ஓடிவந்து, தன் குழந்தையை மோந்து மோந்து அன்பைப் பொழிந்துகொண்டிருந்தது. தன் மகவுக்கு நேர்ந்த ஆபத்தை நினைத்து பதறும் தாயின் தவிப்பு, அணையைக்கூட அசைத்துவிடும். அம்மாவின் அன்பு புனிதமானது. கலங்கமற்றது. எதிர்பார்ப்பு இல்லாதது. நல்லது மட்டுமே நினக்கும் ஒரே உயிர் அம்மா மட்டும்தான். படைத்தவன் பிள்ளையின் உயிரைப் பறித்து விடுவார். ஆனால் தன் பிள்ளை எந்நிலையிலும் சாகவே கூடாது என நினைப்பவர் தாய் மட்டும்தான். எங்கெங்கோ அலைந்து தேடும் நிம்மதி, தாயின் மடியில் தலைசாய்ப்பதில் கிடைத்து விடுகின்றது.

பெற்றால்தான் பிள்ளையா, பெறாத தாய்மார்களும் உள்ளனர்தானே. ஆம். இளைஞர் நவீன் போன்றவர்கள், ஆதரவற்ற மனிதர்க்கு, தாயின்மடிகளாக சேவையாற்றி வருகின்றனர். சிரியாவில் புரட்சியாளர்களின் ஆக்ரமிப்பிலுள்ள கிழக்கு கூட்டா பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் புறக்கணித்து, தொடர்ந்து கடும் குண்டுவீச்சு தாக்குதல்கள் இடம்பெற்றுவரும்வேளை, அச்சண்டையில், நிராதரவாய் நிற்கும் மக்களுக்குத் தாய்மடியாகச் செயல்பட்டுள்ளது கானடா நாடு. கானடா பிரதமர் Justin Trudeau அவர்கள், டொரென்டோ விமான நிலையம் சென்று, சிரியாவிலிருந்து வந்த புலம்பெயர்ந்த மக்களை வரவேற்று, இவர்கள், கானடாவில் குடிமக்களாக ஏற்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். 25 ஆயிரம் சிரியா மக்களை ஏற்பதற்கு கானடா அரசு தீர்மானித்துள்ளது. ‘கானடா மிகவும் அருமையான இடம். நீங்கள் பள்ளிக்குப் பாதுகாப்பாகச் செல்லலாம், இங்கே போர் கிடையாது’ என்று, எழுதப்பட்ட விளம்பர அட்டைகளை ஆட்டிக்கொண்டு, கானடாவின் சிறாரும், அம்மக்களை வரவேற்றதைக் காணொளியில் கண்டு வாழ்த்தினோம். மேலும் கானடா பிரதமர், விமானப்படை விமானத்தை சிரியாவுக்கு அனுப்பி இம்மக்களை அழைத்து வருவதற்கு முடிவுசெய்தபோது, கானடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விமானிகள் போரின் அச்சத்தினால், முன்வராத நிலையில், ஓர் இலங்கைத் தமிழரான, விமானி Sriwijaya Krish என்பவர் முன்வந்தார். விமானி கிரிஸ் அவர்கள், அப்போது ஃப்ளை எமிரேட்ஸ் விமானத்தை ஓட்டிச்சென்று கானடாவில் நின்றிருந்தார். அடுத்த அரைமணி நேரத்தில் சிரியா புறப்பட்ட ஏர் கானடா விமானம், 150 பயணிகளைவிட மேலதிகமாக 13 பயணிகளை ஏற்றி கானடா திரும்பியது. மேலும், கானடா பிரதமர், ஏர் டைட்டானியா விமானத்தைச் செலுத்தும் பணியையும் கிரிஸ் இடமே ஒப்படைத்துள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் பிறந்த கிரிஸ் அவர்கள், தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். 

அந்த வளாகத்தில் இளைஞர்களும் இளம்பெண்களும் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். அந்நேரத்தில், அவ்விடத்தில், ஐம்பது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென நுழைந்தார். எல்லாரும் அவரைப் புரியாமல் பார்க்க, ‘நானும் பயிற்சி பெற வந்துள்ளேன்’ என்றார் அவர். ‘‘ஏன்?’’ என்று கேட்டார், பயிற்சி கொடுப்பவர். ‘‘நேற்றுவரை என் மகன் உங்களுடன் இருந்தான். குண்டுவீச்சில் நேற்றிரவு அவன் இறந்துவிட்டான். அவனைப் புதைத்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன். அவனது பணியை இனி நான்தானே செய்ய வேண்டும்’என்றார் முதியவர். எல்லாரும் ஓடிப்போய் கண்ணீருடன் அவரைக் கட்டி அணைத்துக்கொண்டனர். இது நடந்தது சிரியா நாட்டில். சிரியாவில் இயங்கிவரும் இந்தக் குழு, தங்கள் நாட்டில் மக்களாட்சி மலர வேண்டும் என்று செயல்படும் ‘White Helmets அதாவது வெள்ளை நிறத் தலைக்கவசம் அணிந்த தொண்டர்கள். இளையோர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் போன்ற பலரும் இந்த தன்னார்வலர் குழுவில் உள்ளனர். ஆயுதத்தைக் கையில் எடுக்காத இவர்கள், சிரியாவில் குண்டுவீச்சில் சிதைந்துபோகும் கட்டடங்களிலிருந்து, காயம்பட்ட மனிதர்களைக் காப்பாற்றுபவர்கள்.

White Helmets குழுவைச் சார்ந்த காலீத் என்ற இளைஞரின் கதை, கேட்பவர் எல்லாரையும் கண்கலங்கச் செய்கின்றது. இரவு முழுவதும் பணிபுரிந்துவிட்டு, களைப்போடு வீட்டுக்கு திரும்பித் தூங்க நினைத்தவரை, போர் விமானத்தின் குண்டுவீச்சு ஓசை எழுப்பியது. அப்போது அவர் வீட்டுக்குப் பக்கத்து கட்டடம் நொறுங்கிச் சரிந்துகொண்டிருந்தது. சக நண்பர்களுடன் சென்று, பன்னிரண்டு பேரைக் காப்பாற்றிய இளைஞர் காலீத் அவர்களுக்கு, தூக்கம் கண்களை அழுத்தியதால், அந்த இடிபாடுகளின் நடுவிலேயே தூங்கிவிட்டார். ஒரு குழந்தையின் அழுகுரல் மெல்லிய ஓசையாகக் கேட்டதும், அவருக்குச் சட்டென தூக்கம் தொலைந்தது. நண்பர்களுடன் சேர்ந்து இடிபாடுகளின் நடுவே அந்த அழுகுரலைத் தொடர்ந்து, கட்டடச் சிதைவுகளை அகற்றி, 12 மணி நேரம் போராடிக் குழந்தையை நெருங்கினர். பிறந்து பத்து நாள்கள் மட்டுமே ஆன குழந்தை அது. அழுதுகொண்டிருந்த அந்தக் குழந்தையை, இலேசான சிராய்ப்புகளுடன் பத்திரமாக மீட்டுக் கொடுத்துவிட்டு வெளியேற முயன்றபோது, இடிபாடுகள் நொறுங்கி விழுந்து இளைஞர் காலீத்தைச் சாகடித்தது. இந்த வெள்ளை நிறத் தலைக்கவசக் குழு, அடிபட்டவர் எந்த இனம் என்று பார்ப்பதில்லை. இக்குழுவினருக்கு, ஒவ்வோர் உயிரும் விலைமதிப்பற்றது என்று சொல்கின்றனர். இவர்கள், இதுவரை ஏறத்தாழ 24 ஆயிரம் பேரைக் காப்பாற்றியுள்ளனர். அன்பர்களே, 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போர், இந்த மார்ச் மாதத்தில் எட்டாம் ஆண்டைத் தொடுகிறது. இரண்டாம் உலகப் போர்கூட இவ்வளவு நீண்ட காலம் நடந்ததில்லை. போரில் இதுவரை நான்கு இலட்சத்து 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பத்து இலட்சம் பேர் வரை காயமடைந்துள்ளனர். ஏறத்தாழ ஒரு  கோடியே இருபது இலட்சம் பேர், தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக அலைகின்றனர்.

சேலம், வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் பால்ராஜ். இவர், கடந்த வாரத்தில், ஐந்து ரோடு அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தபோது, சாலை ஓரமாக 16 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர், கண்ணீர்விட்டு அழுதபடி நிற்பதை பலரும் பார்த்தும் பாராமுகமாக செல்வதைக் கவனித்துள்ளார். மாணவி பள்ளிச் சீருடையில் நின்றதால் சந்தேகமடைந்து அழைத்து விபரம் கேட்டுள்ளார் பால்ராஜ். அதற்கு அந்த மாணவி, தான் ஓமலூரிலிருந்து வருவதாகவும், +2 பொதுத் தேர்வு எழுத அரசுப் பள்ளிக்குச் செல்ல காலையில் வீட்டிலிருந்து கிளம்பி வந்து மாற்று பேருந்தில் ஏறி பள்ளி செல்ல வந்ததாகவும் ஆனால் பேருந்தை தவற விட்டுவிட்டதாகவும் கூறி கதறி அழுதுள்ளார். அந்நேரத்தில், மேலதிகாரியிடம் உத்தரவுபெற்று, தன் மோட்டார் சைக்கிளில் அந்த மாணவியை ஏற்றி, குறித்த நேரத்தில் பள்ளியில் இறக்கிவிட்டுள்ளார் பால்ராஜ்.

அதேபோல், உத்தர பிரதேச மாநிலம், சஹரான்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் 57 வயது நிரம்பிய பூபேந்திர தோமர். கடந்த மாதம் 23ம் தேதி, இவர் பணியில் இருந்தபோது, அவரின் 27 வயது நிரம்பிய ஒரே மகள் ஜோதி திடீரென இறந்துவிட்டதாக தகவல் வந்தது. செவிலியராகப் பணியாற்றி வந்த தனது மகள் ஜோதிக்கு, ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் செய்து வைத்திருந்தார் அவர். உடன் இருந்த காவல்துறையினர் அவரை உடனடியாக வீட்டுக்குச் செல்லுமாறு ஆறுதல் கூறினர். ஆனால், யாரும் வாகனத்தை எனது வீட்டுக்குத் திருப்ப வேண்டாம், இங்கே சாலையில் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். அவரை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று கூறி, காயமடைந்த அந்த இளைஞரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்து, அவரின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை எனத் தெரிந்தபின், அங்கிருந்து பூபேந்திரா சென்றார். அதன்பின் பூபேந்திரா அவர்கள், வீட்டுக்குச் சென்று, தனது மகளின் இறுதிச்சடங்குப் பணிகளை கவனித்து அவரை அடக்கம் செய்துள்ளார். வாழ்க்கையில் எப்போதும் ஒரு தேவை இருந்துகொண்டே இருக்கின்றது. அதேநேரம், அதில் ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து, மனதை வருத்திக்கொண்டிருக்கின்றது. அந்நேரங்களில் தலைசாய்ப்பதற்கு, ஏதாவது ஒரு தாயுள்ளம் கொண்டவரின் மடியை இறைவன் அனுப்புகின்றார். தாயான தெய்வம், நம்மை ஒருபோதும், எவ்வேளையிலும் கைவிடுவதில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.