சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

நாம் பிறரை மன்னித்தால் மட்டுமே கடவுள் நம்மை மன்னிப்பார்

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் மறையுரையாற்றுகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்

06/03/2018 15:38

மார்ச்,06,2018. கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்கு, நாம், நம் பாவநிலையை ஏற்க வேண்டும் மற்றும் பிறரை மன்னிக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்.

மன்னிப்பு பற்றி அடிக்கடி பேசிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில் ஆற்றிய மறையுரையிலும், எந்தவித கசப்புணர்வும் இன்றி, நாம் பிறரை மன்னித்தால் மட்டுமே, கடவுள் நம்மை மன்னிப்பார் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

நாம் வெறுப்புணர்வுக்கு அடிமையாகிவிடாமல் இருக்குமாறு எச்சரித்த திருத்தந்தை, நாம் கடவுளால் மன்னிக்கப்படுவதற்கு, முதலில் நாம் பாவிகள் என்று நம்மையே ஏற்பது முக்கியம் என்று கூறினார்.

அசரியா, நெருப்பின் நடுவில் எழுந்து நின்று உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடியது பற்றிக் கூறும், இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம் பற்றி முதலில் மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, ஆண்டவரை மறுதலிக்க மறுத்ததற்காக, அசரியா எரியும் நெருப்பில் போடப்பட்டார், ஆனால் இத்துன்பத்திற்காக, அவர் ஆண்டவரைக் குறை கூறவில்லை, மாறாக, அவர் தொடர்ந்து ஆண்டவரின் பெருமையை அறிவித்துக்கொண்டும், தீமையின் ஆணிவேர் பற்றிக் குறிப்பிட்டு, பாவம் செய்திருந்தாலும், கடவுள் அவர்களைக் காப்பாற்றினார் என்றும் புகழ்ந்துகொண்டிருந்தார் என்று கூறினார்.

பிறர்மீது குற்றம் சுமத்தாமல், தன்னையே குறை கூறுதல், கிறிஸ்தவ ஞானத்தின் ஓர் அங்கம் என்றும், ஒப்புரவு அருளடையாளத்திற்கு இத்தகைய மனநிலையோடு செல்ல வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

மனம் வருந்தும் இதயத்தை ஆண்டவர் அன்புகூர்கிறார் என்றும், இந்த இதயம் ஆண்டவரிடம் உண்மையைக் கூறும் என்றும், கடவுளில் நம்பிக்கை வைப்பவர்கள் ஒருபோதும் ஏமாற்றம் அடையமாட்டார்கள் என்றும் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

06/03/2018 15:38