சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ விவிலியம்

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 7

கானா திருமண நிகழ்வைச் சித்திரிக்கும் ஓவியம் - RV

06/03/2018 14:59

காலணிகள் உற்பத்தியில், குறிப்பாக, விளையாட்டுத் துறையில் பயன்படுத்தக்கூடிய காலணிகளை உற்பத்தி செய்வதில் புகழ்பெற்ற Nike என்ற நிறுவனம், 1988ம் ஆண்டு வெளியிட்ட ஒரு விளம்பர வரி, "Just do it". பல்வேறு விளையாட்டுக்களில் சிறந்துவிளங்கிய வீரர்கள், இந்த விளம்பரத்தில் தோன்றி, ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், சில சாகசங்களைச் செய்தபின், ஒவ்வொருவரும் காமிராவைப் பார்த்து, "Just do it" என்ற சொற்களைக் கூறுவர். வீட்டில் தொலைக்காட்சி பெட்டிக்கு முன் அமர்ந்து, இந்த விளம்பரத்தைக் காணும் நம் அனைவரையும் நேரடியாகப் பார்த்து, கட்டளையிடுவதுபோல், "Just do it" என்ற சொற்கள் நம்மை வந்தடைந்தன.

ஒரு கட்டளையைப்போல் ஒலிக்கும் "Just do it" என்ற இந்த மூன்று சொற்களை, தமிழில் மொழிபெயர்ப்பது கடினம். மேலோட்டமாக மொழிபெயர்த்தால், 'சும்மா செய்துவிடுங்கள்' 'துணிந்து செய்யுங்கள்' என்று சொல்லலாம்.

விளையாட்டுத் துறையில் உயர்ந்த சிகரங்களை அடைந்தவர்களைக்கொண்டு "Just do it" என்ற சொற்கள் சொல்லப்பட்டிருப்பதால், இவற்றின் பொருளை ஓரளவு புரிந்துகொள்கிறோம். அதாவது, எந்த ஒரு விளையாட்டிலும், உன்னத சிகரத்தை அடைவது எளிதல்ல. அச்சத்தையும், அயர்வையும் வென்று, தடைகள் பல தாண்டி, இலக்குகளை அடையவேண்டும். அடைய விரும்பும் இலக்கு, மிகத் தூரமாக, மிக உயரமாகத் தோன்றும்போது, மனம் தளர்ந்துவிடாமல், 'முயற்சி செய்யுங்கள்' என்று உந்தித்தள்ளும் சொற்களே, "Just do it".

விளையாட்டுத் துறையிலிருந்து இச்சொற்களைப் பிரித்தெடுத்து, வேறு பலச் சூழல்களில் பொருத்தும்போது, வேறு வகையான அர்த்தங்கள் தோன்ற வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக, பணியிடங்களிலோ, உறவுகளிலோ, பின்விளைவுகள் எதையும் சிந்திக்காமல், எவ்விதத் திட்டமும் இல்லாமல், 'போகிற போக்கில் செய்யுங்கள்' என்ற பொருள் கொள்ளும் வகையிலும், "Just do it" என்ற சொற்களைப் பயன்படுத்த முடியும். நமக்குள் ஓர் எண்ணம், அல்லது, உணர்வு தோன்றியதும், அதைப்பற்றி அதிகம் சிந்திக்காமல், ‘மனதில் தோன்றியதைச் செய்துவிடுங்கள்’ என்ற ஆபத்தான அர்த்தங்களையும் "Just do it" என்ற சொற்கள் தரக்கூடும்.

செயல்படுவதற்கு உந்தித்தள்ளும் இந்த மூன்று சொற்களை இன்று நாம் சிறப்பாகச் சிந்திக்கக் காரணம், "அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று அன்னை மரியா சொன்ன அந்த மூன்று சொற்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட "Just do it" என்ற இந்த மூன்று சொற்கள், இதைப் பயன்படுத்திவரும் Nike நிறுவனத்திற்கு ஏராளமான இலாபத்தைப் பெற்றுத் தந்துள்ளன என்பதை மறுக்க இயலாது. அன்னை மரியா கானா திருமணத்தில் சொன்ன "அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்ற சொற்கள், 20 நூற்றாண்டுகளைத் தாண்டி, இன்னும் பலருக்குப் பல வழிகளில் பயனளித்து வருகின்றன.

கானா திருமணத்தில், 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது' என்று அன்னை மரியா ஆரம்பித்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்துடன், 'தன் நேரம் இன்னும் வரவில்லை' என்று இயேசு கூறினார். மரியன்னை, தன் மகன் மீது கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால், அவர் கூறியதைப் பெரிதுபடுத்தாமல், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்று பணியாளரிடம், சொல்லிவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றார். இதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு விவரித்துள்ளார்:

யோவான் நற்செய்தி, 2: 6-9

யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.

பணியாளர்கள் தொட்டியில் ஊற்றியது தண்ணீர். ஆனால், அதை அவர்கள் மொண்டு எடுத்துச் சென்றபோது, அது திராட்சை இரசமாக மாறியிருந்தது. எப்போது, எப்படி இந்தப் புதுமை நடந்தது என்பதை ஆய்வு செய்யும்போது, அழகிய, ஆழமான எண்ணங்கள் தோன்றுகின்றன.

வழக்கமாக, இயேசுவின் புதுமைகளில், அவர் சொல்லும் ஒரு சொல்லோ, அல்லது அவரது ஒரு செயலோ புதுமைகள் நிகழ காரணமாக அமையும். ஆனால், இந்தப் புதுமை நடந்தபோது, அப்படி தனிப்பட்ட வகையில் இயேசு எதையும் சொன்னதாகவோ, செய்ததாகவோ நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை. கானா திருமணத்தைச் சித்திரிக்கும் ஓவியங்கள் பலவற்றில், நீர் நிரப்பப்பட்ட தொட்டிகளை, இயேசு ஆசீர்வதிப்பதைப் போல் இக்காட்சி வரையப்பட்டுள்ளது. ஆனால், நற்செய்தியில் நாம் வாசிப்பது இதுதான். இயேசு, “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்றார். பின்னர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்றார். இவ்விரு கூற்றுகளுக்குமிடையே, அவர், நீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் மீது கைகளை நீட்டியதாகவோ, தண்ணீரைத் தொட்டதாகவோ, ஆசீர் அளித்ததாகவோ, வேறு எதையும் செய்ததாகவோ நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை.

இயேசு கூறிய இவ்விரு வாக்கியங்களுக்குமிடையே, நற்செய்தியாளர் யோவான், ஓர் அழகிய வாக்கியத்தைப் பதிவுசெய்துள்ளார். 'தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதும், பணியாளர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள். இதுதான் அந்த வாக்கியம். மிகவும் பொருள்நிறைந்த வாக்கியம். என்னைப் பொருத்தவரை, எப்போது அந்தப் பணியாளர்கள் விளிம்பு வரை, அதாவது, தொட்டிகள் நிறைந்து வழியும் வரை நீர் நிரப்பினார்களோ, அப்போதே அந்தத் தண்ணீர், திராட்சை இரசமாக மாறியது. புதுமை நிகழ்ந்துவிட்டது.

திராட்சை இரசம் தீர்ந்துவிட்டச் சூழலில், அந்தப் பிரச்சனைக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத ஒரு செயலாக, 'தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதைக் கேட்டு, பணியாளர்கள், குழப்பமும், எரிச்சலும், அடைந்திருக்கலாம் என்று சென்ற விவிலியத்தேடலில் சிந்தித்தோம். இந்த எரிச்சலோடு, பணியாளர்கள் செயல்பட்டிருந்தால், அத்தொட்டிகளை, ஏனோதானோவென்று,  அரைகுறையாய் நிரப்பியிருப்பார்கள். ஆனால், நற்செய்தியாளர் யோவான், அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள் என்று தெளிவாகக் கூறியுள்ளார்:. அவ்வாறெனில், அந்த பணியாளர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த உள்ள மாற்றம்தான், தண்ணீர் இரசமாக மாறிய அந்த மாற்றத்தையும் உருவாக்கியது.

தங்கள் அதிர்ச்சி, தயக்கம், எரிச்சல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, பணியாளர்கள், தாங்கள் செய்யும் செயலை முழுமையாகச் செய்த அந்த நேரத்திலேயே, அவர்கள் ஊற்றிய தண்ணீர் திராட்சை இரசமாக மாற ஆரம்பித்துவிட்டது. முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மன நிறைவைத் தருவதோடு, வாழ்வில் மாற்றங்கள் பலவற்றையும் உருவாக்கும்.

கானா திருமணத்தில், புதுமையாய்த் தோன்றிய திராட்சை இரசம் எங்கிருந்து வந்ததென பந்தி மேற்பார்வையாளருக்குத் தெரியவில்லை. மணமகனைக் கூப்பிட்டு கேட்கிறார். அவருக்கும் தெரியவில்லை. ஆனால், பணியாளருக்குத் தெரிந்திருந்தது. “பணியாளருக்குத் தெரிந்திருந்தது” என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டுச் சொல்வது, நமக்கு மற்றொரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தருகிறது. மையங்கள் ஓரமாவதையும், ஓரங்கள் மையமாவதையும், யோவான் இந்த வாக்கியத்தில் சொல்கிறார். இதைப் புரிந்து கொள்ள முயல்வோம்.

திருமண வைபவங்களில் பல பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், எல்லாப்பொருட்களும் முக்கியத்துவம் பெறுவதில்லை.  மணமகன், மணமகள் இவர்கள் அணியும் ஆடைகள், அமரும் நாற்காலிகள் ஆகியவை, புகழ் பெறலாம், எல்லா புகைப்படங்களிலும் இடம் பெறலாம். ஆனால், கை, கால்களைக் கழுவும் தொட்டிகள், புகழ் அடைவதில்லை. புகைப் படங்களில் இடம் பெறுவதில்லை. அதேபோல், இந்த வைபவங்களில் முழு நேரமும் பணிகள் செய்யும் பணியாளர்களைப் பற்றி யாரும் பெரிதாக நினைப்பதில்லை. திருமணப் புகைப்படங்கள் அடங்கிய எந்த ஒரு ‘ஆல்பத்’தையும் திறந்து பார்த்தால்,. அங்கு, பணியாளர்களின் படங்கள் ஒருசில இடம் பெற்றிருக்கும். அப்படங்கள் அனைத்திலும், பின்னணியில், ஏதாவதொரு பணியை அவர்கள் செய்வதுபோல் இருக்கும். யாரும் அவர்களை மையப்படுத்தி புகைப்படங்களை எடுப்பது கிடையாது. இயேசுவின் இந்தப் புதுமை வழியாக, அந்தத் திருமணத்தில் மையமாக இருக்க வேண்டியவர்கள் மறைந்துவிட்டனர். ஓரத்தில் இருந்த பணியாளர்கள், இயேசுவுடன் சேர்ந்து, புதுமையின் நாயகர்களாயினர். யாருடைய கவனத்தையும் ஈர்க்காத நீர்த்தொட்டிகள், இறைமகனுடைய கவனத்தை ஈர்த்தன. அவரது புதுமைக்கு அடித்தளமாயின.

நம் வாழ்விலும், எதை எதை மையப்படுத்துகிறோம். அல்லது ஓரத்தில் ஒதுக்கி வைக்கிறோம் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்க இப்புதுமை வாய்ப்பளிக்கிறது. நம் வாழ்வில், மையங்களும், ஓரங்களும் மாறவேண்டுமெனில், துணிவுடன், முழு மனதுடன் அந்த மாற்றங்களைச் செய்ய, இறைவன் துணையை நாடுவோம். அத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தால், சாதாரண தண்ணீர், சுவைமிகுந்த திராட்சை இரசமாக மாறியதுபோல், நம் வாழ்விலும் சாதாரண, எளிய நிகழ்வுகள், அற்புதங்களாக உருவெடுக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

06/03/2018 14:59