சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அம்புரோஸ் பாகம் 1

புனித அம்புரோஸ் - RV

07/03/2018 15:36

மார்ச்,07,2018. அவுரேலியுஸ் அம்புரோசியுஸ் என்றும் அறியப்படும் புனித அம்புரோஸ், நான்காம் நூற்றாண்டில் மிகவும் புகழ்பெற்றிருந்த, மற்றும் செல்வாக்குப் பெற்றிருந்த திருஅவை தலைவர்களில் ஒருவர். அக்காலத்தில் இத்தாலியின் இரண்டாவது தலைநகராக விளங்கிய, மிலான் நகரின் ஆயராக, 374ம் ஆண்டில் பொது மக்களால் ஒரு வித்தியாசமான முறையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழில் அமிர்தநாதர் என அழைக்கப்படும் புனித அம்புரோஸ், திருஅவையின் முதல் நான்கு மறைவல்லுனர்களில் ஒருவர். நான்காம் நூற்றாண்டில், மிக முக்கியமான இறையியலாளர்களில் ஒருவராகவும் இவர் திகழ்ந்தார். இயேசு கிறிஸ்துவின் இயல்பு, மூவொரு கடவுளின் இயல்பு போன்ற திருஅவையின் விசுவாசக்கோட்பாடுகளுக்கு முரணாகப் போதித்த ஆரியனிசக் கொள்கையை, இவர் கடுமையாய் எதிர்த்தார். இவர், திருவழிபாடுகளில், பதிலுரைப் பாடல்களை ஊக்குவித்தவர், மற்றும், மக்களின் மீட்பர் வந்தார் என்ற திருவருகைப் பாடலை இயற்றியவர். ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் வாழ்வில் நல்தாக்கத்தை ஏற்படுத்தி, அவர் மனம் மாறுவதற்குக் காரணமானவர் இவர். புனித அகுஸ்தீன் அவர்களுக்குத் திருமுழுக்கு அளித்தவேளையில், தே தேயும் என்ற புகழ்பெற்ற நன்றிப் பாடலை இவர் எழுதினார் என நம்பப்படுகிறது. மிலான் நகரின் பாதுகாவலராகிய புனித அம்புரோஸ், அவர் காலத்து இத்தாலிய சமூகத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். 

புனித அம்புரோஸ் அவர்கள், ஏறத்தாழ கி.பி. 340ம் ஆண்டில், உரோமையைச் சேர்ந்த கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தார். தற்போதைய ஜெர்மனி நாட்டிலுள்ள Belgic Gaul எனுமிடத்தில், Satyrus, Marcellina ஆகிய இரு உடன்பிறப்புக்களுடன் வளர்ந்தார் இவர். குழந்தையாக இருந்தபோது, தேனீக்கள் இவரது முகத்தில் பறந்து, ஒரு சொட்டு தேனை விட்டுச் சென்றன. இந்நிகழ்வு, புனித அம்புரோஸ், பிற்காலத்தில் வியத்தகு பேச்சாளராக மாறுவதற்கு ஓர் அடையாளம் என்று, இவரது தந்தை நம்பினார் எனச் சொல்லப்படுகின்றது. இவரது தந்தை இறந்த பின்னர்,  இவர் உரோம் நகரில், சட்டம், இலக்கியம், மேடைச்சொற்பொழிவு ஆகிய துறைகளைக் கற்றுத் தேர்ந்தார். புனித அம்புரோஸ், தனது தந்தையைப் போலவே, உரோமையப் பேரரசில் உயர் பதவி பெற்றார். ஏறத்தாழ 372ம் ஆண்டில், Liguria மற்றும் Emilia பகுதியின் ஆட்சியராகப் பணியேற்றார். ஆயினும் இவரின் தலைமை அலுவலகம் மிலான் நகரில் இருந்தது. 374ம் ஆண்டில், மிலான் ஆயர் காலமானதைத் தொடர்ந்து, மிலான் மக்கள் பேராயரை நியமிக்க கூடியிருந்தனர். அக்கூட்டத்தை இவர் வேடிக்கைப் பார்க்கச் சென்றார். அவ்விடத்தில் அம்புரோஸ் அவர்களைப் பார்த்த மக்கள், அம்புரோஸ், மிலான் ஆயர் எனக் கூச்சலிட்டனர். அப்பணியை இவர் ஏற்பதற்குத் தயங்கி, மறைவான இடத்திற்குச் சென்றுவிட்டார். இதனையறிந்த உரோமைப் பேரரசர் வலேரியன் அவர்கள், அம்புரோஸ் அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பவர் எவரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என அறிக்கையிட்டார். இதனால், அம்புரோஸ் அவர்கள், பொதுவில் வந்து ஆயர் பணியைக் கட்டாயமாக ஏற்கவேண்டியிருந்தது. இது கடவுளின் திட்டம் எனச் சொல்லி, அப்பொறுப்பை ஏற்க வைத்தார் பேரரசர். மேலும், ஏனைய ஆயர்களும், பொது மக்களும், அம்புரோஸ் அவர்களைக் கட்டாயப்படுத்தி, இப்பொறுப்பை ஏற்கச் செய்தனர்.

அம்புரோஸ் அவர்கள் அச்சமயத்தில், திருமுழுக்குக்கூட பெற்றிருக்கவில்லை. அதனால் அவருக்கு திருமுழுக்கு அளிக்கப்பட்டது. பின்னர், திருத்தொண்டராகவும், பின்னர், அருள்பணியாளராகவும், பின்னர், 374ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி, ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். இவை எல்லாமே ஒரே வாரத்தில் நடந்து முடிந்தன. ஆயரான பின்னர், தனது நிலம் மற்றும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்தார். இச்செயல், இவரை மேலும் சமூகத்தில் பிரபலமாக்கியது. இவர், பல நேரங்களில், அரசியலில், பேரரசரைவிட, மிகவும் வல்லமை கொண்டவராக விளங்கினார். அரசில் உயர் பதவியில் இருந்த அம்புரோஸ் அவர்கள், திருஅவையின் மனிதரானார். இந்தப் பெரிய பொறுப்புக்கு எந்தத் தயாரிப்பும் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த இவர், உடனடியாக இறைவேண்டல் செய்வதற்கும், விவிலியத்தைக் கற்பதற்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். உரோம் நகரைச் சேர்ந்த, அருள்பணியாளர் Simplician  என்பவரிடம், இறையியல் கற்றார். ஏற்கனவே இவருக்கு கிரேக்க மொழி தெரியும் என்பதால், இந்த இறையியல் கல்வியின் உதவியுடன் பழைய ஏற்பாட்டையும், கிரேக்க எழுத்தாளர்கள் பற்றியும் படித்தார். இவற்றின் வழியாக கிடைத்த அறிவை இவர், தனது மறையுரைகளுக்குப் பயன்படுத்தினார். கிறிஸ்தவப் போதகர்கள் திறமையற்றவர்கள் என நினைத்திருந்த, ஹிப்போ நகர் அகுஸ்தீன், மிலான் ஆயர் அம்புரோஸ் அவர்களின் திறமையால் மிகவும் கவரப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆயர் அம்புரோஸ் அவர்களின் ஆழ்ந்த ஆன்மீகமும், இறைவார்த்தை மீது கொண்டிருந்த அன்பும், சட்டத்திலும், பேச்சாற்றலிலும், அரசியலிலும் இவர் கொண்டிருந்த திறமைகளோடு கைகோர்த்தன. இவை, ஓர் அரசியல்வாதியாக இருந்த இவரை, தொடக்ககாலத் திருஅவையில், மாபெரும் போதகர்களில் ஒருவராக ஆக்கியது.

அக்காலத்தில் நிலவிய தப்பறைக் கொள்கைகள், அந்நிய தெய்வ வழிபாடு, வெளிவேடத்தனங்கள் ஆகியவற்றை இவர் கடுமையாக எதிர்த்தார். அரசிலிருந்து மதம் தனித்தியங்குவதற்கு கடுமையாய் உழைத்தார். கத்தோலிக்கப் பேரரசர் முதலாம் தெயோதோசியுஸ் அவர்கள், தெசலோனிக்காவில் அப்பாவி குடிமக்களை கொலை செய்ததற்காக, பேரரசரைத் திருஅவையைவிட்டு துணிச்சலுடன் விலக்கி வைத்தார் அம்புரோஸ். பாடல்கள் இயற்றுவது, திருப்பாடல்களை பாடிச் செபிப்பது போன்றவற்றில் இவர் சிறந்து விளங்கினார். திருஇசை மீது இவர் கொண்டிருந்த ஆர்வம், இன்றும், இத்தனை நூற்றாண்டுகள் சென்றும் நல்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்புரோசியன் வழிபாட்டுமுறை இதற்கு ஒரு சான்று.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

07/03/2018 15:36