2018-03-07 15:17:00

இமயமாகும் இளமை : இளம் பெண் சாதனையாளர்கள்


கோவை ஆலாந்துறையைச் சேர்ந்த இளம்பெண் எஸ்.ஹரிப்பிரியா அவர்கள், திருவள்ளுவர் ஓவியத்தில் குறள்களை எழுதியும், 24 மணி நேரத்தில் 1330 குறள்களையும் தலைகீழாக எழுதியும், இரட்டை சாதனை படைத்துள்ளார். எம்.எஸ்சி ஃபேஷன் டெக்னாலஜி படித்துள்ள இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு சிறுவயதிலேயே, தான் வாசிக்கின்ற வாசகங்களை தலைகீழாக எழுத வேண்டும் என்ற ஆசை. கணித எண்கள், தமிழ், ஆங்கில வார்த்தைகளை இடமிருந்து வலம் எழுதுவதற்கு பதிலாக, வலமிருந்து இடமாக தலைகீழாக எழுதிப் பார்த்தார். பிளஸ் 2 படிக்கும்போது நேரம் கிடைக்கும் நாளில் 1330 திருக்குறள்களையும் ஏறத்தாழ 2 ஆண்டுகளில் எழுதி முடித்தார். அதையே நுணுக்கி எழுதினால் எத்தனை பக்கத்தில் எழுதமுடியும் என்பதை அறிய, அரிசியில் வார்த்தைகளை எழுதக்கூடிய (லென்ஸ் வைத்து பார்த்தால் மட்டுமே படிக்க முடியும்) பேனா நிப்பைப் பயன்படுத்தி எழுத ஆரம்பித்தார். அதையே. 3 அடிக்கு 1.5 அடி உயர, அகலமுள்ள ஓவியத்தில் உள்ள வள்ளுவரின் தாடியிலும், ஆடையிலும் மட்டும் எழுதினார். 1330 குறள்களையும் தலைகீழாக 3 நாளில் எழுதி முடித்தார். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் களஞ்சியம் நகரைச் சேர்ந்தவர் இளம்பெண் கலைவாணி. எம்.ஏ. ஆங்கில இலக்கியம், பி.எட். படித்துள்ள இவருக்குத் தன்னம்பிக்கைப் பேச்சாளர், கவிஞர், சாதனையாளர்களை உருவாக்கும் சாதனையாளர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர் எனப் பல முகங்கள். இவர் எழுதிய கவிதை, ‘மிக நீளமான கவிதை’ என்ற பெயரில் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 2016ம் ஆண்டில் பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டுகளைப் பல வடிவங்களில் சேகரித்தும் தயாரித்தும் சாதனை படைத்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் சிறப்பிக்கப்படுகின்றது.  தங்கள் நாடுகளிலும், சமூகங்களிலும் மிகச் சிறந்த பங்கு வகித்த சாதாரண பெண்களைக் கவுரவிக்கவும், பெண்கள் சமூகத்திற்கு ஆற்றியுள்ள சேவைகள் பற்றி  சிந்தித்துப் பார்க்கவும், பெண்களின் வாழ்வு மாற்றம் காண எல்லாரும் உழைப்பதற்கும் இந்நாள் அழைப்பு விடுக்கின்றது. உலகில் நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் பெண்கள் 20 விழுக்காட்டுக்கும் குறைவே. உலக அளவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயுள்ள ஊதிய வேறுபாடு 23 விழுக்காடு, அது கிராமங்களில் நாற்பது விழுக்காடுவரை உள்ளது. உலகிலுள்ள 500 செல்வந்தர்களில் பெண்கள் 55 பேர். 20 வயதுக்குட்பட்ட 12 கோடி பெண்கள், பாலியல் வன்செயலுக்குக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். திருமணமான பத்துப் பெண்களுக்கு ஒருவர் வீதம், தங்களின் ஊதியம் எவ்வாறு செலவழிக்கப்பட வேண்டும் என்பது, கணவர்களால் ஆலோசிக்கப்படுவதில்லை என ஐ.நா.வின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.