2018-03-07 16:17:00

பாப்புவா நியூ கினி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு...


மார்ச்,07,2018. "நமது இதயங்களில் பிறரன்பின் சுடர் ஒரு சில வேளைகளில் அணைவதுபோல் இருந்தாலும், இறைவனின் இதயத்தில் அது ஒரு போதும் இறக்காது" என்ற சொற்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், பாப்புவா நியூ கினி நாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள ஒரு தந்தியில், அண்மையில், அந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தோரை இறைவனிடம் ஒப்படைப்பதாகவும், பாதிக்கப்பட்டோருக்கு செபிப்பதாகவும் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இத்தந்தியில், இந்த இயற்கை பேரிடர் வேளையில் துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் தன் செபங்களையும் ஆசீரையும் திருத்தந்தை வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 26ம் தேதி, பாப்புவா நியூ கினி நாட்டில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 85 பேர் இறந்துள்ளனர் என்றும், 500க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும், மார்ச் 7, இப்புதன் விடிந்த வேளையில், 6.7 ரிக்டர் அளவில் மற்றொரு நில அதிர்வு அந்நாட்டில் பதிவானதென்று ஊடகங்கள் அறிவித்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.