2018-03-07 16:55:00

வத்திக்கானில் முதன்முறையாக Hackathon என்ற கணணி நிகழ்வு


மார்ச்,07,2018. திருப்பீடத் தொடர்புத் துறை, திருப்பீடக் கலாச்சார அவை, மற்றும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து, மார்ச் 8, இவ்வியாழன் முதல், 11, இஞ்ஞாயிறு வரை, VHacks என்ற தலைப்பில், கணணி தொடர்பான Hackathon என்ற ஒரு நிகழ்வை, வத்திக்கானில் ஏற்பாடு செய்துள்ளன.

கணணியில் நுழைந்து, தகவல்களைத் திரட்டும் “hacking” என்ற சொல்லையும், நெடுந்தூர ஓட்டமான “marathon” என்ற சொல்லையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள Hackathon என்ற இந்த நிகழ்வு, வத்திக்கானில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.

கணணியின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவோர், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வழிகளை, குறுகிய நேரத்தில் கண்டறியும் போட்டியாக Hackathon நிகழ்வு அமையும் என்று இந்நிகழ்வை ஏற்பாடு செய்வோர் கூறியுள்ளனர்.

VHacks என்ற இந்த நிகழ்வில், ஹார்வர்ட் மற்றும் MIT  பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த கணணி வல்லுனர்கள் பங்கேற்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரையும் ஒருங்கிணைக்கும் சமுதாயம், இளையோரிடையே அதிகமான உரையாடல்களை வளர்த்தல், மற்றும் தொழில் நுட்பத்தை மனித முன்னேற்றத்திற்காக பயன்படுத்துதல் ஆகியவை, Hackathon நிகழ்வின் குறிக்கோள்கள் என்று ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.