2018-03-07 15:30:00

விளையாட்டு, எல்லாரையும் சேர்க்கின்ற கல்விநிலையம்


மார்ச்,07,2018. தென் கொரியாவின் PyeongChang நகரில், இன்னும் இரு நாள்களில், மாற்றுத்திறனாளர் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பிக்கவிருக்கின்றன என்று சொல்லி, அதில் கலந்துகொள்பவர்கள் மற்றும் நடத்துபவர்களுக்கு தன் வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரையை வழங்கிய பின்னர்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 09, வருகிற வெள்ளிக்கிழமை முதல், 18ம் தேதி வரை நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளர் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் பற்றிக் குறிப்பிட்டு, விளையாட்டு, மக்களிடையே, திறமைக்குறைகளை வெல்லவும், பாலங்களைக் கட்டியெழுப்பவும் உதவுகின்றது என்று கூறினார்.

இந்த நகர் அண்மையில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியுள்ளது என்று கூறியத் திருத்தந்தை, பெரிய விளையாட்டு நிகழ்வுகள், மக்கள் மத்தியில் அமைதிக்குரிய கூறுகளை வழங்குவதன் வழியாக, போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே பாலங்களைக் கட்டுவதற்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை, இந்த நகரின் நிகழ்வு காட்டியுள்ளது என்று கூறினார்.

மாற்றுத்திறனாளர் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், திறமைக்குறைகளை வெல்லும் வழியைக் காட்டும் அடையாளங்களாக உள்ளன என்றும், விளையாட்டு, எல்லாரையும் சேர்க்கின்ற கல்விநிலையம் என்றும் திருத்தந்தை கூறினார்.

இன்னும், மார்ச், 09, வருகிற வெள்ளிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படவுள்ள, ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் என்ற ஒப்புரவு அருளடையாள வழிபாடு பற்றியும் அறிவித்தார் திருத்தந்தை. ஒப்புரவு அருளடையாளம் வழியாக புனித பாஸ்கா விழாவுக்குத் தங்களைத் தயாரிப்போருக்கு உதவும் விதத்தில் அனைத்து ஆலயங்களும் திறக்கப்பட்டு இருக்கட்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.