சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

அருள்பணியாளர் இறைஇரக்கத்தின் சான்றாக விளங்க வேண்டும்

திருப்பீட பாவமன்னிப்பு நிறுவனம் நடத்துகின்ற பயிற்சியில் பங்குபெறும் வருங்கால இளம் அருள்பணியாளர்களுக்கு அருளாளர் 6ம் பவுல் அரங்கத்தில் உரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

09/03/2018 14:33

மார்ச்,09,2018. ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர்கள், அதைப் பெறவருகின்ற விசுவாசிகளுக்கு, இறைஇரக்கத்தின் சான்றுகளாகவும், அவர்களுக்குச் செவிமடுப்பவர்களாகவும், அவர்களின் மனச்சான்று மற்றும் சுதந்திரத்தை எப்போதும் மதிப்பவர்களாகவும் இருக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருங்கால அருள்பணியாளர்கள் குழு ஒன்றிடம் கூறினார்.

திருப்பீட பாவமன்னிப்பு நிறுவனம் நடத்துகின்ற பயிற்சியில் பங்குபெறும் ஏறத்தாழ நானூறு, வருங்கால இளம் அருள்பணியாளர்களை, இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசிகளுக்கு, குறிப்பாக, இளையோருக்கு ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும்போது, அவர்களுக்கு எவ்வாறு செவிமடுக்க வேண்டும் என்பதை விளக்கினார்.

இவ்வாண்டில், நடைபெறவிருக்கும் இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தைக் கருத்தில்கொண்டு, ஒப்புரவு அருளடையாளத்திற்கும், இறையழைத்தலைத் தெளிவாகத்  தேர்ந்தெடுத்தலுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி, இந்தப் பயிற்சி இடம்பெற்று வருவதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இளைஞர்களாக இருக்கும் அருள்பணியாளர்கள், இந்த அருளடையாளத்தை நிறைவேற்றும்போது, இளையோர் மத்தியில் இளையோராகவே இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர் இறைஇரக்கத்தின் ஊற்று அல்ல, மாறாக, அதை வெளிப்படுத்தும் கருவியாகவே எப்போதும் இருக்கின்றார் என்றும், அவர்கள், மனச்சான்றுகளின் தலைவர்களாக மாறும் ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் கூறியத் திருத்தந்தை, தூய ஆவியாரின் குரலுக்குத் தாழ்மையுடன் செவிமடுக்கவும் கேட்டுக்கொண்டார்.

ஒப்புரவு அருளடையாளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குமுன்னர், அக்கேள்விகளை உற்றுக் கேட்க வேண்டுமெனவும் கூறியத் திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர், எப்போதும் செவிமடுக்கும் மனிதராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த இரு கூறுகளின் வழியாக, ஒப்புரவு அருளடையாளம், இறையழைத்தலைத் தெளிவாகத் தேர்ந்தெடுத்தலுக்கு இட்டுச்செல்லும் மற்றும், விவேகமும் செபமும் நிறைந்த அருளடையாள உரையாடலுக்கு வழிவகுக்கும் என்றும் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர், மருத்துவராகவும், நீதிபதியாகவும், மேய்ப்பராகவும், தந்தையாகவும், ஆசிரியராகவும், கற்பவராகவும் இருக்கின்றார், அதேநேரம், அருள்பணியாளர், குறிப்பாக, இளம் அருள்பணியாளர் சான்று பகர்பவராக இருக்கின்றார் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

09/03/2018 14:33